வாய்த்தர்க்கத்தால் ஏற்பட்ட விபரீதம் !



தன்னுடைய 12 வயதான மகளின் கழுத்தை அறுத்த, அவருடைய தந்தை, தனது கழுத்தையும் அறுத்து கொண்ட சம்பவம், தியத்தலாவ, கொஸ்லாந்த பெட்டிக்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரியும் தன்னுடைய மனைவிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தபோது, இருவருக்கும் இடையில், கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 29ஆம் திகதியன்று ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே, 12 வயதான மகளின் கழுத்தை அறுத்துள்ளார். அதன் பின்னர், தன்னுடைய கழுத்தையும் அறுத்து கொண்டுள்ளார்.

கடுமையான காயங்களுக்கு உள்ளான இருவரும், தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என லியங்காவல பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற போது, ஆறு வயதான சிறுவனும் அந்த வீட்டில் இருந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக, இன்றைக்கு ஒரு வருடத்துக்கு முன்னர், அவருடைய மனைவி வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். அதன்பின்னர், இவ்விருவருக்கும் இடையில், தொலைபேசியில் அவ்வப்போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளான தந்தை, மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பண்டாரவளை லியங்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.