
மாத்தளை பொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து நபர்கள் இன்று (03) கைது செய்யப்பட்டனர்.
கைதான சந்தேகநபர்கள் மஹன்வர அக்குரணை மற்றும் மாத்தளை வரகாமுர பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம்.என். விக்ரமநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் மாத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் குணவர்தனவின் வழிகாட்டுதலின் கீழ் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (02) காலை மாத்தளை நகரத்தின் வழியாக இளைஞர்கள் குழு ஒன்று பேரணியாகச் சென்று மாத்தளை பொலிஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இளைஞர்கள் சிலர் மாத்தளை எட்வர்ட் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, சம்பவ இடத்திற்கு பல பொலிஸ் அதிகாரிகள் வந்து, இளைஞர்களைச் சோதனையிட்டு, போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி இருவரைக் கைது செய்ததைத் தொடர்ந்து, குறித்த இளைஞர்கள் குழு இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், மாத்தளை பொலிஸாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, மைதானத்தில் இருந்த இளைஞர்களை சோதனையிட்டபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.
கஞ்சா வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும், கைது செய்யப்பட்ட ஏனைய 5 பேரும் மாத்தளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.