நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் நல்லடக்கம்


உலகின் 1.4 பில்லியன் கத்தோலிக்க மக்களின் வாழும் தலைவரான நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
நூற்றாண்டு பழமையான மரபை மாற்றியமைக்கும் வகையில், புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி வேண்டுகோளாக, ரோமில் உள்ள புனித மரியாள் மேஜியோரே பெசிலிக்காவில் அவரது திருவுடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதாகும்.

ரோமின் பிரதான ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள தொழிலாள வர்க்கப் பகுதியில் அமைந்துள்ள புனித மரியாள் மேஜியோரே பெசிலிக்காவை அவர் தனது இறுதி ஓய்வு இடமாகத் தேர்ந்தெடுத்தது, சமூகத்தால் முக்கியமானதாகக் கருதப்படாத மக்கள் மீதான அவரது இரக்கத்தையும் பிரதிபலிக்கிறது.

தனது 88 ஆவது வயதில் கடந்த 21 ஆம் திகதி நித்திய இளைப்பாறிய பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடலுக்கு அன்று முதல் இன்று வரை இலட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று இறுதி ஆராதனை நிகழ்வு வத்திக்கானில் இடம்பெற்றது.

உலகளாவிய கத்தோலிக்க மதத்தின் பிரதான தேவாலயமான வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவின் திறந்தவெளி முற்றத்தில் இந்த இறுதி ஆராதனை நிகழ்வு இடம்பெற்றது.

இறுதி ஆராதனை நிகழ்வை வத்திக்கானின் சிரேஸ்ட பதவிகளில் ஒன்றான கேமர்லெக்னோ பதவியை வகிக்கும் கார்டினல் கெவின் ஃபாரெல் தலைமை தாங்கி நடத்தினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ் உட்பட பல உலகத் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, இந்த நிகழ்வில் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொண்டதுடன், கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தனவும் ஹெக்டர் அப்புஹாமியும் கலந்து கொண்டனர்.