அம்பலாந்தோட்டையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் காயம் ; சந்தேக நபர் கைது


அம்பாந்தோட்டை - அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொக்கல பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி அதிகாலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தங்காலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (01) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கொக்கல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சூரியவெவ பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் உள்நாட்டு துப்பாக்கி ஒன்றும் சந்தேக நபரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பலாந்தோட்டை, கொக்கல பிரதேசத்திற்கு கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வீடொன்றில் இருந்த நபரொருவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தி அங்கிருந்து தப்பிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.