ராஜபக்ஷர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள் ; பொதுஜன பெரமுன அரசாங்கத்திடம் வலியுறுத்தல்



ராஜபக்ஷர்கள் மீதும், கடந்த அரசாங்கங்கள் மீதும் சுமத்திய குற்றசசாட்டுக்களை நிரூபிப்பதற்காகவே நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கினார்கள். ஆகவே மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

சிலைகளையும், மரங்களையும் வழிப்படுவது மூர்க்கத்தனமானது என்று குறிப்பிட்ட தரப்பினர் தற்போது ஸ்ரீ தலதா மாளிகை சிறப்பு வழிபாட்டை நடத்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரும் வகையில் சிறப்பு தலதா வழிபாட்டை நடத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது.

2009 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு அமைதி கிடைக்க வேண்டும். நாட்டு மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சிறந்த திட்டமிடலுடன் ஸ்ரீ தலதா வழிபாட்டு யாத்திரை நடத்தினார்.

இந்த அரசாங்கம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஸ்ரீ தலதா யாத்திரையை எவ்வித திட்டமிடலுமில்லாமல் நடத்தியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டார்கள். அரசாங்கத்தின் திட்டமிடலின்மை இதனூடாக வெளிப்பட்டுள்ளது.

ராஜபக்ஷர்கள் திருடர்கள்,அபிவிருத்தி கருத்திட்டங்களில் நிதி மோசடி செய்தார்கள் என்று மக்கள் விடுதலை முன்னணி பல ஆண்டுகாலமாக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டியது. ராஜபக்ஷர்களை விமரிசிக்காமல் கடந்த காலங்களில் தேர்தல் கூட்டங்களை மக்கள் விடுதலை முன்னணி நடத்தவில்லை.

ராஜபக்ஷர்கள் மீதும், கடந்த அரசாங்கங்கள் மீதும் சுமத்திய குற்றசசாட்டுக்களை நிரூபிப்பதற்காகவே நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கினார்கள். ஆகவே மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டும்.

தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் மக்கள் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் அரசாங்கத்துக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.