நாட்டில் மருந்து பற்றாக்குறை மற்றும் காலதாமதமின்றி மருந்துகளை தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு அவசியமான கொள்முதல் செயல்முறை மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற நடவடிக்கைகளையும் நெறிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் காலத்தில் மருந்து வழங்கும் செயல்பாட்டில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இருக்காது என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மருந்துகள் மற்றும் உபகரணக் கொள்வனவில் ஏற்படும் காலதாமதங்களைக் குறைத்துக் கொள்ள கொள்முதல் செயல்முறையை நெறிப்படுத்தல் தொடர்பில் கொழும்பு தேசிய மருத்துவமனையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதாரத் துறையில் எழுந்துள்ள மற்றும் ஏற்படக்கூடிய சவால்களைச் சமாளிக்க, அனைத்துத் துறைகளின் ஆதரவையும் பெற்று, ஒரு குழுவாகச் செயல்படுவதே எமது குறிக்கோள். கடந்த காலங்களில் சுகாதாரத் துறையில் சிக்கல்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஒட்டுமொத்த மருந்து விநியோக செயல்பாட்டில் ஏற்பட்ட குளறுபடிகள், மருந்துகளின் தரம், விலை மற்றும் பற்றாக்குறை ஆகியவை மேற்படி குற்றசாட்டுகள் எழுவதற்கு மிக முக்கிய காரணங்களாக இருந்தன.
எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் இயற்கை அழிவுகளை விட இது மிகவும் சிக்கலானது. ஆகையால் இதுபோன்ற சூழ்நிலைகளைத் தடுப்பதற்கு தற்போதைய அரசாங்கத்தால் ஒரு முறையான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இத்திட்டத்தில் மேலும் பல புதிய விடயங்களை இணைத்துக் கொள்ளலாம். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்காக 604 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த தொகையில் 200 பில்லியன் ரூபா அடுத்த 8 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு வைத்தியர் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுக்கான சம்பளத் தொகையாக 150 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்காக திறைசேரி வழங்கும் பணத்தில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை.
ஒழுங்குமுறைக்கமைய திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டிருப்பினும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான காலத்தை குறைப்பதில் முழு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
திறைசேரியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியை விநியோகஸ்தர்களுக்கு வழங்குவதற்கான செயன்முறையை தாமதமின்றி திறம்படச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனைகளுக்கு அவசியமான மருந்துகள் பற்றிய தகவல்களை விரைவாகவும் முறையாகவும் பெறுவதற்கும், மருந்துகளை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை குறைப்பதற்கும், அதன் மூலம் தொடர்ந்து மருந்துகள் வழங்கும் செயன்முறையை உறுதி செய்வதற்கும் ஒரு குழுவாக இணைந்து செயல்படுவது அவசியம்.
இந்தப் பணியை இப்போதிலிருந்தே தொடங்க வேண்டும். 2026 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் மருந்துகளை வழங்கும் செயல்முறை மிகவும் முறையாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். தற்போது உள்ள சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளைக் குறைக்க வேண்டும். குறிப்பாக, இனிமேல், பொதுமக்களுக்குத் தேவையான உயர்தரமான மருந்துகளை தாமதமின்றி தொடர்ந்து வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
திட்டமிட்டபடி தேவையான மருந்துகளை வழங்கும் இந்த செயன்முறை முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனின், அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டு மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடுகளின் அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மருந்துகளைப் பெறுவதற்கான முறையை நாட வேண்டியிருக்கும். எவ்வாறெனினும் கடந்த காலங்களை போல் அல்லாமல் எதிர்வரும் காலத்தில் மருந்து வழங்கும் செயல்பாட்டில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இருக்காது என்றார்.