
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை பகுதியில் இன்று 01.04.2025 அதிகாலை காட்டுயானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாந்தாமலை, ரெட்பானா கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான மாமாங்கம் சந்திரா என்பவரே இந்த சம்பவத்தில் பலியானவராவார்.
தனது வீட்டு வளவினுள் புகுந்த யானைகளைக் கண்டு குறித்த பெண் உயிர் தப்புவதற்காக ஓடிய போது காட்டு யானை மறித்து தாக்கியதில் இவர் உயிரிழந்துள்ளார் என தெரிய வருகின்றது.
சம்பவம் தொடர்பில் பட்டிப்பளை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி டினேஸ்வரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பணித்தார்.
பொலிஸார் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.