ரணில் ஆட்சியில் இருந்திருந்தால் எலோன் மாஸ்க் ஊடாக ட்ரம்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரி நிவாரணத்தைப் பெற்றிருப்பார் - ராஜித சேனாரத்ன


அரசாங்கம் மக்களுக்கு எந்த நிவாரணங்களையும் வழங்காமல் சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை மீள செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு கோரி கடிதம் அனுப்பியிருக்கிறது. ஆனால் ரணில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு கால அவகாசம் கோரவில்லை. இன்று ரணில் ஆட்சியில் இருந்திருந்தால் எலோன் மாஸ்க் ஊடாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரி நிவாரணத்தைப் பெற்றிருப்பார் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வங்குரோத்து நிலைமையிலிருந்து நாட்டை மீட்டுள்ளதை சர்வதேசம் வரவேற்கின்றது. ஆனால் எமது நாட்டிலுள்ள கட்சி அரசியல் முறைமையால் அவரை விமர்சிக்கும் சூழலே காணப்படுகிறது. நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகவே அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றன. ஆனால் இன்று கட்சியை பலப்படுத்திக் கொள்வதற்காக நாட்டைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை செயற்படுத்தி, வட்டியையும் செலுத்திக் கொண்டு மக்களுக்கான நிவாரணங்களையும் வழங்கிக் கொண்டு ரணில் விக்கிரமசிங்க நாட்டை மீட்டெடுத்தார்.

ஆனால் இன்று இந்த அரசாங்கம் மக்களுக்கு எந்த நிவாரணங்களையும் வழங்காமல் சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை மீள செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு கோரி கடிதம் அனுப்பியிருக்கிறது. ஆனால் ரணில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு கால அவகாசம் கோரவில்லை.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பான பெபேறுகள் இப்போதிருந்தே வெளிவர ஆரம்பித்துள்ளன. மே 6ஆம் திகதியின் பின்னரே முழுமையான பெபேறுகள் வெளிவரும்.

மே மாதத்திலிருந்து இந்த நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடிகள் ஆரம்பமாகும். ஆகஸ்டில் அதன் பிரதிபலன்கள் வெளிவர ஆரம்பிக்கும். டிசம்பரில் மீண்டும் வரிசைகளில் காத்திருப்பதற்கு மக்கள் தயாராக வேண்டும். தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள் வரிசைகளில் முதலில் நிற்கத் தயாராகுங்கள்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இங்கிருந்து கொண்டு அமெரிக்காவுடனான பேச்சுவாரத்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறுகின்றார்.

அவ்வாறு எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை. இது குறித்து ட்ரம்பிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். எலோன் மாஸ்க்குடன் இணைந்தே ட்ரம்ப் இந்த தீர்மானங்களை முன்னெடுக்கின்றார். எலோன் மாஸ்க்குடன் ரணில் விக்கிரமசிங்க நேரடித் தொடர்புகளைக் கொண்டிருக்கின்றார்.

எனவே தற்போது ரணில் ஆட்சியில் இருந்திருந்தால் எலோன் மாஸ்க் ஊடாக ட்ரம்புடன் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்து நிவாரணத்தைக் கோரியிருப்பார். பூகோளமயமாக்கலுக்கு மத்தியில் எமது நாடு தனித்து பயணிக்க முடியாது என்றார்.