பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு பின்னர் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுக்கும் அதிகாரப்பூர்வ செயல்முறையான Conclave மே 7 ஆம் திகதி நடைபெறும் என வத்திக்கான் அறிவித்துள்ளது.
இந்த முறை பாப்பரசர் தேர்தலுக்கு தகுதி பெற்ற கர்தினால்களின் எண்ணிக்கை 135 ஆகும்.
அவர்களில் 53 கர்தினால்கள் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள், 23 பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள், 20 பேர் வட அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள், 18 பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள், 17 பேர் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஓசியானியாவைச் சேர்ந்த 4 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
உலகம் முழுவதிலுமிருந்து 71 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாப்பரசர் தேர்தலுக்கு வரும் கர்தினால்கள் 80 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பு, பூமியில் மிகவும் இரகசியமான வாக்கெடுப்பாக கருதப்படுகிறது.
வெளி உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு நடைபெறும் இந்த பாப்பரசர் தேர்தலுக்காக இன்று (ஏப்ரல் 28) முதல் சிஸ்டைன் தேவாலயம் மூடப்பட்டுள்ளது.
சிவப்பு உடையில் அலங்கரிக்கப்பட்டு வாக்களிக்க வரும் கர்தினால்களின் வாக்குச் சீட்டுகள், பாப்பரசரை தேர்ந்தெடுத்த பின்னர் எரித்து அழிக்கப்படும்.
1800 ஆம் ஆண்டு முதல் தொடரும் இந்த பாரம்பரியத்திற்கு காரணம், வாக்கெடுப்பின் இரகசியத்தன்மையை பாதுகாப்பது மற்றும் அரசியல் தலையீடுகளிலிருந்து திருச்சபையை பாதுகாப்பதற்காகவாகும்.
வாக்கெடுப்பு முடிந்த பின்னர், பாப்பரசர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை வெளி உலகத்திற்கு தெரிவிப்பது, வாக்குச் சீட்டுகளை எரிப்பதால் வெளிப்படும் புகையின் மூலமாகும்.
அதன்படி, சிஸ்டைன் தேவாலயத்தின் புகைக்கூண்டிலிருந்து வெள்ளை புகை வெளியேறினால், கர்தினால்களின் வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டதை இது குறிக்கிறது.