தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தால் தவிசாளர்கள் எல்லாரும் ரில்வின் சில்வா சொல்வதையும் பிமல் ரத்நாயக்க சொல்வதையுமே கேட்பவர்களாக இருப்பார்கள் - இரா. சாணக்கியன்


யாழ்ப்பாணத்தில் உள்ள சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தால் தவிசாளர்கள் எல்லாரும் ரில்வின் சில்வா சொல்வதையும் பிமல் ரத்நாயக்க சொல்வதையுமே கேட்பவர்களாக இருப்பார்கள். அவ்வாறான நிலைமை வந்தால் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதண்டு விடுங்கள் என சொல்லுவார்கள். இது இதண்டும் விடயம் அல்ல. இது மக்களின் பிரச்சினை என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் எமது தமிழ் இனத்திற்கும் இந்த தேர்தல் மிக முக்கியமானது.இந்த தேர்தலானது எங்களுடைய தமிழ் இனத்திற்கும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு மானப் பிரச்சினையாக உள்ளது.

உலகமெல்லாம் எங்களுடைய தமிழ் மக்கள் என்று சொன்னால் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் தமிழ் மக்கள் என்று சொன்னால் கல்வியிலே சிறந்து கல்விமான்களாக விளங்குபவர்கள்.

கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் நாடு முழுவதும் மாத்திரம் அல்ல உலகம் முழுவதும் யாழ்ப்பாணத்திற்கு என்ன நடந்தது என்று கேள்வி தான் இருக்கிறது.

இது தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல்ல வேறு பாராளுமன்ற உறுப்பினர்களையும் பார்த்து கேட்கிறார்கள். உள்ளூராட்சி சபைத் தேர்தல் மூலம் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

இந்த விடயத்தை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும்.மக்கள் இந்த தேர்தலில் அனைவரும் ஒரு அணியாக நின்று இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு வாக்களித்தால் மட்டுமே அந்த மாற்றத்தை நாம் காட்ட முடியும்.

என்னைப் பொறுத்தவரையில் சிறிய கட்சிகள், சுயேட்சை குழுக்கள், யாழ்ப்பாணத்தில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட கட்சிகள், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உள்ள கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் அது வீணாக போன வாக்குகளாகவே நான் கருதுவேன்.

கே.கே.எஸ். வீதியை ஏ.கே.டி.வீதி என மாற்றினால் கூட யாரும் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறு மாற்றினால் அந்தக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் கூட குரல் எழுப்ப முடியாது.

கே.கே.எஸ். வீதியை ஏ.கே.டி.வீதி என மாற்றுவது ஒரு சிறிய உதாரணம். சாதாரண விடயத்தை அரசாங்கம் முன்னெடுத்தால் அந்த கட்சியின் சார்பிலே தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட தங்களது கருத்து தெரிவிக்க முடியாத நிலை இருக்கிறது.

அதே கட்சியில் உள்ளூராட்சி சபையின் தவிசாளர்களும் உறுப்பினர்களும் தெரிவாகியிருந்தால் அதற்கான எதிர்ப்பை தெரிவிக்க முடியாதவர்களாக இருப்பார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள எல்லா சபைகளின் தவிசாளர்களும் பின்னர் ரில்வின் சில்வா சொல்வதையும் பிமல் ரத்நாயக்க சொல்வதையுமே கேட்பவர்களாக இருப்பார்கள்.

அவ்வாறான நிலைமை வந்தால் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதண்டு விடுங்கள் என சொல்லுவார்கள். இது இதண்டும் விடயம் அல்ல. இது மக்களின் பிரச்சினை. இலங்கை தமிழ் அரசுக் கட்சியிடம் இந்த உள்ளாட்சி சபைகள் இருக்குமாக இருந்தால் நாம் அதற்கு எதிர்ப்பினை காட்ட முடியும்.

பாராளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகளாக நாங்கள் எழுந்து பேசினால் எங்களை பார்த்து சொல்வார்கள். நீங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதி அல்ல.

நாமே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாங்களே சொல்வோம் என எமக்கு கூறுவார்கள். தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்களை கேட்டு அதை சொன்னால் கூட பரவாயில்லை. அவர்களின் கருத்தை கூட கேட்பதில்லை.

பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களை தனக்கு தெரியாது என அனுர அரசாங்கத்தின் அமைச்சர் சொல்கிறார். இதுதான் அவர்களின் கட்சியினுடைய நிலைமை.

225 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற பாராளுமன்றத்திலேயே இதுதான் நிலைமை என்றால் 9 ஆயிரம் வரையான பிரதேச சபை உறுப்பினர்கள் இருக்கின்ற உள்ளூராட்சி சபை வேட்பாளர்களை நினைத்துப் பாருங்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வலிவடக்கில் காணிகளை விடுவிப்பதாக மக்கள் சிலர் சந்தோஷப்படலாம். ஆனால் அந்த விடுவிக்கப்பட காணிகளை என்ன தேவைக்காக பயன்படுத்தப் போகின்றது என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும். அதன் காணி பயன்பாட்டை பற்றி தீர்மானிக்க உள்ளூர் அதிகார சபைகள் முக்கியமானது.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இராஜினாமா கடிதங்களை வாங்கி வைத்திருப்பதாக நாம் கேள்விப்படுகிறோம். உண்மையாக இருக்கலாம்.

பாராளுமன்றத்தில் அவர்கள் பேசுவதை நான் காணுவதில்லை. வரவு செலவுத் திட்டத்தின் 30 நாட்கள் பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்ற போது நான் ஒரு நாளும் அவர்கள் பேசுவதை காணவில்லை. ஏன் செய்தியில் கூட அவர்கள் பேசியதை காணவில்லை.

மட்டக்களப்பில் எங்கள் கட்சியிலிருந்து வேண்டாம் என்று சொல்லி வெளியில் விடப்பட்ட ஒருவர் இன்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர். இது தான் அவர்களது நிலைமை.

ஜனாதிபதிக்கு இவை பற்றி தெரியாது. ஜனாதிபதிக்கு இன்றைய பொய்கள் என்று சொல்லி ஒரு பட்டியல் வழங்கப்படும். அதை அவர் வாசிப்பர். ஜனாதிபதி சொல்கின்ற பொய்களை அவர்களால் நடைமுறைப்படுத்த முடியாது.

ஜனாதிபதி நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி சிந்தித்து இருந்தால் ஜனாதிபதி இவ்வாறான பொய்யான வாக்குறுதிகளை கொடுத்திருக்கமாட்டார்.

நாட்டில் நிதியில்லை. அபிவிருத்தி செய்வதற்கு நிதி இல்லை. நிதி இல்லாத நாட்டை வைத்துக் கொண்டு மன்னாரிலிருந்து புத்தளத்துக்கு 90 கிலோமீட்டர் வீதி அமைக்க போகிறாராம், யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க போகிறாராம்,வடக்கில் தொழில்பேட்டைகள் அமைக்க போகிறார்களாம்.

இதுக்கெல்லாம் எங்கிருந்து நீதி வரப்போகிறது. குறைந்தது வரவு செலவு திட்டத்தில் இதனை ஆய்வு செய்வதற்காவது நிதியை ஒதுக்கி இருக்கலாமே.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தீவகப் பகுதிகளை சுற்றி திரிகிறார். அவருக்கு தெரியும் தீவக மக்களிடம் குடிநீர் தருகிறோம் என்று சொன்னால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள் என்று. தீவகத்திற்கு குடிநீரை கொண்டு செல்வதற்கு எந்த திட்டமும் வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.

ஏனைய தமிழ் கட்சிகளை நான் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் சைக்கிள் கட்சியின் தலைவர் மட்டக்களப்பில் மண்டூருக்கு சென்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

மண்டூர் என்பது எனது பாட்டனாரின் பிறந்த ஊர். இந்த ஊரில் சைக்கிள் கட்சி கூட்டம் போட்டிருக்கிறார்கள் என்பதை நான் வியப்பாக பார்த்தேன்.வேட்பாளர் கூட்டத்தில் அவர் பேசிய படம் மாத்திரமே கிடைத்தது.

மக்களின் படங்களை காணவில்லை. அது தொடர்பில் விசாரித்து பார்த்தபோது பெரிய அளவில் அங்கு மக்கள் கூடவில்லை என அறிந்தேன். வெளியில் இருந்து இதனை பார்ப்பவர்கள் இதனை எப்படி யோசிப்பார்கள்.

மட்டக்களப்பை பொறுத்தவரை இலங்கை தமிழ் அரசுக் கட்சி 11 உள்ளூராட்சி சபைகளில் 9 உள்ளூராட்சி சபைகளை வெல்லக் கூடிய நிலைமையில் இருக்கிறது.

ஏனைய இரண்டு உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவை பெற்றவர்களே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை தான் காணப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதுமே சைக்கிள் கட்சி கடந்து பாராளுமன்றத் தேர்தலில் ஆயிரத்து 250 வாக்குகளையே ஒட்டுமொத்தமாக எடுத்தார்கள். மட்டக்களப்பில் ஒரு வட்டாரத்தை கூட வெல்ல முடியாத நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என சொல்லுகிறார்கள்.

தேசிய மக்கள் சக்திக்கு பாடம் புகட்டலாம் என்று சொல்லலாமே. பிள்ளையான் அணிக்கு பாடம் புகட்டலாமென சொல்லலாமே. வடக்கில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பாடம் புகட்டலாம் என்று சொல்லலாமே.

தேர்தலுக்கு சில தினங்கள் இருக்கின்ற நிலையில், எங்கள் கட்சியினுடைய மூத்த உறுப்பினர்களின் அன்பு கட்டளை மீறி நாங்களும் ஏனைய தமிழ் கட்சிகளை விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

யாழ் மாவட்டத்திலிருந்து எச்சரிக்கையாக சொல்கிறேன். தயவுசெய்து இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு பாடம் புகட்டுவதை விட்டுவிட்டு உங்களுடைய அரசியலை முன்னெடுங்கள்.

உங்கள் கட்சியின் கொள்கையை சொல்லுங்கள். மக்கள் வாக்களிக்கட்டும். தமிழ் அரசுக் கட்சியையும் சுமந்திரனையும் விட்டால் அவர்களுக்கு அரசியலை கொண்டு செல்ல முடியாது.

பொது எதிரியாக நாங்கள் தேசிய மக்கள் சக்தியை பார்க்கின்றோம். எமது மண்ணில் சிங்கள தரப்புகள் ஆட்சி செய்யக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு பாடம் புகட்டுவோம் என்று சொல்பவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

எதிர்வரும் மே மாதம் ஆறாம் திகதி இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு அனைவரும் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். மே 7ம் திகதி எனக்கு தொலைபேசி எடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வென்றுவிட்டது என்ற தகவலை சொல்லுங்கள் என்றார்.