பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து ; தாய் பலி ; தந்தை, இரு பிள்ளைகள் படுகாயம்


அநுராதபுரம் - கெக்கிராவை பகுதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் ஒன்று அநுராதபுரத்திலிருந்து கெக்கிராவை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தந்தை, தாய் மற்றும் இரு பிள்ளைகள் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த 44 வயதுடைய தந்தையும் 11 மற்றும் 12 வயதுடைய இரு பிள்ளைகளும் கெக்கிராவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து 27 வயதுடைய பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.