அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை முறையாக அமுல்படுத்ததாவிடின் எதிர்வரும் இரு வாரங்களில் ஹோட்டல் உணவு பொருட்களின் விலை மேலும் உயர்வடையும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை வர்த்தகர்கள் தீர்மானித்துக் கொள்வார்களாயின் அரசாங்கம் எதற்கு எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
கொழும்பில் உள்ள அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சந்தையில் எவரும் கட்டுப்பாட்டு விலைக்கு அமைய அரிசியை விற்பனை செய்வதில்லை.
அரிசி உரிமையாளர்களில் ஒரு தரப்பினர் அரசாங்கத்துக்கு சார்பாகவும், பிறிதொரு தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிராகவும் உள்ளனர்.
இவர்களின் போட்டித்தன்மையால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை சந்தையில் முறையாக அமுல்படுத்தாவிடின் எதிர்வரும் ஓரிரு வாரத்தில் ஹோட்டல் உணவு பொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும்.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் ஏற்படுவதால் உணவு பொருட்களின் விலைகளை நிலையான முறையில் பேண முடியாத நிலை காணப்படுகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உணவு மாபியாக்களை இல்லாதொழிக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அதிகாரத்தை கோரினார் ஆனால், அவர் உணவு பொருள் மாபியாக்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றார்.