
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சனிக்கிழமை கொழும்பிலிருந்து பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ள பிரதமர் மோடி, வலுசக்தி, சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் புதன்கிழமை (2) வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். 5 மற்றும் 6ஆம் திகதிகளில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். அதற்கமைய நாளை சுதந்திர சதுக்கத்தில் பிரதமருக்கான வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அதன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
பேச்சுவார்த்தைகளில் எட்டப்படும் இணக்கப்பாடுகள் தொடர்பில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் கூட்டு ஊடாக அறிவித்தல் வெளியிடப்படும். அதன் பின்னர் சம்பூர் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தல் மற்றும் மத வழிபாட்டுத் தளங்கள் சிலவற்றுக்கு சூரிய மின் உற்பத்தி களங்களை வழங்கி வைக்கும் நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்பார்.
தொடர்ந்து தம்புளையில் குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலையும் அவரால் திறந்து வைக்கப்படவுள்ளது. இவையனைத்தும் கொழும்பிலிருந்து மெய்ந்நிகர் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன. 6ஆம் திகதி அநுராதபுரம் ஸ்ரீமகா போதிக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். இதன் போது அநுராதபுரத்தில் புகையிர சமிஞ்ஞை கட்டமைப்பை திறந்து வைத்தல் மற்றும் புகையிர பாதை திறந்து வைத்தல் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
இவற்றுடன் வலுசக்தி, சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளன. இந்திய பிரதமர் மோடியின் விஜயம் நிறைவடைந்ததன் பின்னர் இவை தொடர்பில் அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.