பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்த மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியர் !


தனியார் பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்த போது, மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆசிரியையே, மாணவியின் கன்னத்தில் பஸ்ஸில் வைத்து திங்கட்கிழமை (07) மாலை, டிக்கோயா பகுதியில் வைத்து அறைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பாடசாலை நிறைவடைந்த பின் ஹட்டனில் இருந்து டிக்கோயா ஊடாக போடைஸ் நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பொதுமக்கள் என பலரும் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, மாணவியின் கால், ஆசிரியை ஒருவரின் சாரியில் மிதி பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியை, பஸ்ஸில் வைத்தே, அந்த மாணவியின் கன்னத்தில் பளார், பளார் என்று அறைந்துள்ளார். அத்துடன், தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

ஆசிரியைக்கு எதிராக, ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான மாணவி, டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முறைப்பாடு தொடர்பில், ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.