பிள்ளையானின் சாரதி சி.ஐ.டி. யினரால் வாழைச்சேனையில் வைத்து கைது !


மட்டக்களப்பு வாழைச்சேனையில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் சாரதியான ஜெயந்தன் என்பரை வெள்ளிக்கிழமை (18) காலையில் சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த 8 ஆம் திகதி பிள்ளையான் அவரது காரியாலயத்தில் வைத்து சி.ஐ.டி. யினர் கைது செய்து அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையையடுத்து கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தலுடன் தொடர்புபட்ட பிள்ளையானின் சாரதியான ஜெயந்தனை கொழும்பில் இருந்து சென்ற சி.ஐ.டி.யினர் அவரை அவரது வாழைச்சேனை வீட்டில் வைத்து கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.