பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது


பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மஹரகம பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹரகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மஹரகம, பொல்வத்த சந்தியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கொடிகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் மஹரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவரிடமிருந்து 52 ஆயிரம் ருபா பணத்தை கொள்ளையிட்டுள்ளதாகவும், வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவரிடமிருந்து பணப்பை மற்றும் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்டுள்ளதாகவும் கிரிபத்கொடை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்ளையிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கொள்ளையிட்டதாக கூறப்படும் பல்வேறு பொருட்கள் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.