பஸ் மற்றும் ரயில் சேவைகளை அறிய விசேட எண்கள் !


சிங்கள, தமிழ் புத்தாண்டிற்காக தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் மக்களுக்காக சிறப்பு பயணிகள் போக்குவரத்து சேவைகள் இன்று (12) இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தங்கள் கிராமங்களுக்குச் செல்லும் மக்களில் சுமார் 90% பேர் ஏற்கனவே கொழும்பை விட்டு வெளியேறிவிட்டதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மத்திய போக்குவரத்து நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பிரதான போக்குவரத்து நிலையம், அதிவேக நெடுஞ்சாலையில் மாகும்புர, கடவத்தையில் உள்ள பிரதான போக்குவரத்து நிலையங்களில் இருந்தும் சிறப்பு போக்குவரத்து சேவைகள் இயக்கப்படுகின்றன.

மாத்தறை, காலி, அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, நுவரெலியா, பதுளை, ஹட்டன், மொனராகலை, அம்பாறை, எம்பிலிப்பிட்டிய ஆகிய பிரதான நகரங்களுக்கு மேலதிக பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை ஊடாக காலி, மாத்தறை, பதுளை, தங்காலை, கதிர்காமம், பதுளை, மொனராகலை, அம்பாறை, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கும் பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, சிங்கள - தமிழ் புத்தாண்டுக்காக தங்கள் கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக ரயில்வே திணைக்களமும் சிறப்பு ரயில் சேவைகளை தொடங்கியுள்ளன.

இதற்கமைய பதுளை, பெலியத்த, அனுராதபுரம், காலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களுக்கு 40 ரயில் சேவைகள் இயக்கப்பட்டுள்ளன.

மேலும், ஏப்ரல் 9 முதல் 21 வரை, ரயில்வே திணைக்களம் இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து கூட்டுப் போக்குவரத்துத் விசேட திட்டம் ஒன்றை தயாரித்துள்ளன.

மேற்கூறிய காலகட்டத்தில், 24 மணி நேரமும் பயணிகள் விபரங்களை அறிந்து கொள்ள 1955 என்ற ஹொட்லைன் எண் மற்றும் 0712 595 555 என்ற வட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களைப் பெற, பஸ்கள் தொடர்பில் 1958 என்ற எண்ணையும், ரயில் விசாரணைகளுக்கு 1971 என்ற எண்ணையும் அழைக்கலாம்.