இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாதொழிப்பு என்பது ஒரு நாட்டின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்துக்கு மிக முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவானது அந்தப் பொறிமுறையை வலுப்படுத்தும் முதன்மையான அரச கட்டமைப்பாக காணப்படுகிறது.
ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் வலுவான ஊழலுக்கு எதிரான தேசியக் கொள்கையை உருவாக்க வேண்டியதன் அவசியம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படும் முதன்மைப் பொறுப்பு அரசியலமைப்பின் ஊடாக ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக ஆணைக்குழுவின் பொறுப்புக்கள் மற்றும் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான ஊழல் எதிர்ப்புக் கொள்கை உருவாக்கம் மற்றும் கண்காணித்தல் வரையான ஆணைக்குழுவின் பணிகள் விரிவாக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளின்படி, ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயம் உட்பட ஊழலுக்கு எதிரான சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆணைக்குழு முக்கிய பங்கு வகிக்கிறது.
ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் சமவாயத்தின் 5ஆவது பிரிவின் கீழான கடப்பாடுகளுக்கு அமைவாக இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தேசிய செயற்திட்டம் (2019-2023) 2019.02.05 ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கிகரிக்கப்பட்டது.
2019-2023 காலப்பகுதிக்கான தேசிய செயற்திட்டத்தின் அடைவுகள் மீளாய்வுக்கு உட்பட்டுள்ளதுடன் கற்றுக்கொண்ட விடயங்கள் தற்போது மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டிலிருந்து ஊழல் ஒழிப்பு எதிர்ப்பு செயற்றிறனை மேம்படுத்தும் நோக்கில் தேசிய மற்றும் சர்வதேச தரப்பினரின் பங்களிப்புடன் 2025-2029 வரையான காலப்பகுதிக்கான புதிய ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் இறுதி வரைவு, 2025.01.21 ஆம் திகதியன்று தொடர்புடைய தரப்பினரின் பரிசீலனைக்காக ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.