எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல கட்சியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது உதய கம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுடன் கைச்சாத்திட்ட 7 ஒப்பந்தங்களில் இரண்டு ஒப்பந்தங்களை கடந்த வாரம் வெளியிட்டோம். இந்த ஒப்பந்தங்களின் உள்ளடக்கம் சமூக கட்டமைப்பில் பிரதான பேசுபொருளாக அமைய வேண்டும் என்று எதிர்பார்த்தோம். இந்தியாவுடனான ஒப்பந்தங்களை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்து பின்வாங்குகிறது.
எரிபொருள் குழாய் நிர்மாணிப்பு மற்றும் எண்ணெய் தாங்கி அபிவிருத்தி முத்தரப்பு ஒப்பந்ததில் 7(2) மற்றும் 8 ஆகிய பிரிவுகளில் இந்த கருத்திட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கு வருகைதரும் இந்தியர்களுக்கு மாத்திரமல்ல இந்திய அரசாங்கத்துக்காக அந்த கருத்திட்டத்தில் தொடர்புபடும் தேசிய பிரதிநிதிகளுக்கும் சட்டத்தின் முன் இந்த கருத்திட்டம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாத வகையில் சிறப்பு உரித்து வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொதுச் சட்டத்தின் பிரகாரம், பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு எதிராக மாத்திரமே வழக்குத் தாக்கல் செய்ய முடியாது. இந்தியாவின் மதுரைக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையிலான உத்தேச மின்விநியோக கருத்திட்ட ஒப்பந்தத்தின் 7ஆம் பிரிவில் 'இந்த செயற்றிட்டத்துக்காக இலங்கைக்கு வரும் இந்தியர்களுக்கும், இந்தியாவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தேசிய பிரதிநிதிகளுக்கும் எதிராக குறித்த கருத்திட்டம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விரு கருத்திட்டங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் எவருக்கு எதிராகவும் இலங்கையில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது. மன்னாரின் அதானி நிறுவனம் முன்னெடுத்த கருத்திட்டத்துக்கு எதிராக சுற்றுச்சூழல்வாதிகள் இலங்கையில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்கள். அவ்வாறு இந்த இரண்டு கருத்திட்டங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது.
இலங்கைக்குள் செயற்படுத்தப்படும் கருத்திட்டங்களில் இலங்கையின் அரசியலமைப்பின் ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். அரசியலமைப்பின் 12(1) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்று தத்துவத்தை இவ்விரு ஒப்பந்தங்களும் முழுமையாக மீறியுள்ளன. மக்கள் வாக்கெடுப்பின்று 12(1) உறுப்புரையை மாற்றியமைக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அச்சட்டத்தை மீறும் வகையில் தான் அரசாங்கம் இந்தியாவுடன் இவ்விரு ஒப்பந்தங்களையும் கைச்சாத்திட்டுள்ளன. ஆகவே, இந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது. அரசியலமைப்புக்கு முரணானது என்றார்.