அநுராதபுரம் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கணவனும் மனைவியும் அநுராதபுரம் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (31) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் அநுராதபுரம் சிராவஸ்திபுர பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை ,மீகஹதென்ன பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுயைட கணவனும் 32 வயதுடைய மனைவியுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 55 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த அநுராதபுரம் நீதிமன்றத்தில் உத்தரவினை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.