வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்டப்பாடசாலைகளில் கல்வி பயிலும் ஆறு மாணவர்கள் பொறியியல், மருத்துவபீடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பினைப் பெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
குறித்த கோட்டத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் இராசரத்தினம் தமிழ்ரூபிகா என்ற மாணவி பொறியியல்பீடத்திற்கும், அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் நே.தசாகரன் என்ற மாணவன் பொறியியல் பீடத்திற்கும், முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற கி.கிசோமிகா, த.ஜக்சாயினி, தி.நிலுஜன் ஆகிய மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், தெ.ருஜன் என்ற மாணவன் மருத்துவ பீடத்திற்கும் செல்வதற்கான வாய்ப்பினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் முழுமையாக கஸ்ட, அதிகஸ்ட பிரதேச பாடசாலைகளை உள்ளடக்கியதாகும். மேலும் அம்பிளாந்துறை பாடசாலையில் முதன்முறையாக பொறியியல்பீடத்திற்கு தெரிவாகியுள்ளமை பாடசாலையின் வரலாற்று சாதனையுமாகும்.
கலைப்பிரிவில் குறித்த கோட்டத்திற்குட்பட்ட 07மாணவர்கள் 3A சித்திகளையும், வர்த்தக்கப்பிரிவில் இரண்டு மாணவர்கள் 3A சித்திகளையும் பெற்றுள்ளனர். அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் அற்புதநாதன் அபிநயா என்ற மாணவி மாவட்டத்தில் இரண்டாம் நிலையை கலைப்பிரிவில் பெற்றுள்ளார். மேலும் குறித்த பாடசாலையைச் சேர்ந்த இருமாணவர்கள் கலைத்துறையில் 3A சித்தியை பெற்றுள்ளனர்.
இதேபோன்று மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலய மாணவர்கள் இருவரும், முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய மாணவர் ஒருவரும், முதலைக்குடா மகா வித்தியாலய மாணவர் ஒருவரும் 3A சித்தியைப் பெற்றுள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது.
இதேபோன்று அரசடித்தீவு மகா வித்தியாலயத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி பயின்ற இரு மாணவர்கள் வர்த்தகப்பிரிவில் 3A சித்தியையும் பெற்றுள்ளனர்.