
கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்து இந்த மாவட்டத்தில் அபிவிருத்திகளை செய்திருந்தேன். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் 51 மில்லியன் ரூபாவினை மட்டுமே மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மகிழுர் கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைத் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன், பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத், இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிதிகள் அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதன்போது, மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.