விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி உயிரிழப்பு !



மாபாகே பகுதியில் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவத்தில் படுகாயமடைந்த இரு சிறுவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிசறை ஜேகொப் மாவத்தை பகுதியில்சனிக்கிழமை (5) மாற்று வீதியினூடாக வந்த கார் ஒன்று வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது மோதியுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவர்கள் மூவரும் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் படுகாயமடைந்த சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

5 வயதுடய வெலிசறை, ராகமை பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த ஏனைய சிறுவர்கள் தொடர்ந்தும் ராகமை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை விபத்துக்கு காரணமான காரின் பின்புறம் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போது மாற்று வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து வந்த கார் இடது புறம் திரும்பிய நிலையில் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது மோதியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவத்தின் பின்னர் கார் சாரதி காரை சம்பவ இடத்திலேயே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபர் தொடர்பில் மாபாகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.