ஆண்டு வருமானம் 18 இலட்சத்துக்கும் மேல் உயர்வடையாதவர்கள் வரி வருமானத்தைக் கோரலாம் - இறைவரித் திணைக்களம் !


மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானம் 18 இலட்சத்துக்கு மேல் உயர்வடையாத நபர் வரி வருமானத்தை கோர முடியும். இதற்கமைய குறித்த மதிப்பீட்டு வருடத்துக்காக அனைத்து வருமான நிலைகளிலும் மதிப்பீடு செய்யக்கூடிய வருமானம் தொடர்பில் சுய வெளிப்படுத்தல் கூற்றினை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் முன்வைத்து குறித்த வரி நிவாரணத்தை கோர முடியும் என தேசிய இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வருடாந்த வருமானம் 18 இலட்சத்துக்கு குறைவான நபர்களுக்கான வைப்பு அடிப்படையிலான வட்டி அல்லது கழிவுக்கான அறவிடப்படும் முற்பணத்துக்கு வருமான வரி நிவாரணத்தை கோர முடியும்.

இந்த வரிச்சலுகையை கோருவதற்கு எதிர்பார்த்துள்ள நபர் வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் சுய வெளிப்படுத்தல் கூற்றினை முன்வைக்க வேண்டும். சகல வைப்பாளர்களுக்கும் செலுத்த வேண்டிய வட்டி அல்லது கழிவு செலுத்தல் அடிப்படையில் நூற்றுக்கு 10 சதவீதம் என்ற அடிப்படையில் முற்பணம் வருமான வரியை குறைக்கும் தீர்மானத்தை செவ்வாய்க்கிழமை (01) முதல் அமுல்படுவதற்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம் வட்டி வருமானம் 10 சதவீதம் முற்பண வருமான வரிக்கு உள்ளடங்கப்படும். இருப்பினும் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானம் 18 இலட்சத்துக்கு மேல் இல்லாத நபர் வரி வருமானத்தை கோர முடியும். இதற்கமைய குறித்த மதிப்பீட்டு வருடத்துக்காக அனைத்து வருமான நிலைகளிலும் மதிப்பீடு செய்யக்கூடிய வருமானம் தொடர்பில் சுய வெளிப்படுத்தல் கூற்றினை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் முன்வைத்து குறித்த வரி நிவாரணத்தை கோர முடியும்.

இதுவரை காலமும் மாதம் 1 இலட்சம் ரூபாய் சம்பளம் பெறும் நபருக்கு விதிக்கப்பட்டிருந்த தனிப்பட்ட வருமான வரி செவ்வாய்க்கிழமை (01) முதல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரி இனி 150000 ரூபா மாத சம்பளம் பெறுநர்களிடம் அறவிடப்படும். உண்ணாட்டரசிறை சட்ட திருத்தத்துக்கமைய வெளிநாடுகளுக்காக வழங்கப்படும் சேவைகள் ஊடாக 15 சதவீதம் வரி அறவிடல் செவ்வாய்க்கிழமை (01) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஏதேனும் சொத்தை குத்தகைக்கோ அல்லது வாடகைக்கு வழங்கும் ஒப்பந்த பத்திரத்துக்கு உரிய முத்திரைக் கட்டணம் செவ்வாய்க்கிழமை (01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.1000 ரூபாய் அல்லது அதன் ஒருபகுதிக்காக இதுவரை காலமும் 10 ரூபாய் முத்திரைக் கட்டணம் அறவிடப்பட்டது. புதிய திருத்தத்தில் இந்த கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது