
2025 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் புதிய மோட்டார் வாகன பதிவுகளுக்கு மாத்திரம் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தௌிவுபடுத்தியுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த நிபந்தனை மோட்டார் சைக்கிள்கள், கை இழுவை இயந்திரங்கள் (hand tractors), இழுவை இயந்திரங்கள் (tractors) மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் சேவைகள் அனைத்திற்கும் TIN எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது இது புதிய வாகன பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று திருத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், இழுவை இயந்திரங்கள் மற்றும் கை இழுவை இயந்திரங்களின் பதிவு அல்லது உரிமை மாற்றங்களுக்கு TIN தேவையில்லை என்று திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த மாற்றம், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதன்மூலம், நிதி பொறுப்புணர்வை வலுப்படுத்தவும், நிர்வாக செயல்முறைகளை ஒழுங்குபடுத்தவும் நோக்கமாக உள்ளது.
TIN எண்ணைப் பெறாத வாகன உரிமையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள், ஏப்ரல் 15க்கு முன் அதனை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்கு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகமான நாரஹென்பிட்டவில் உள்ள பதிவுப் பிரிவை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.