10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் யுவதி கைது




கம்பஹா, யாகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்ய்பட்டுள்ளார்.
 
இந்த கைது நடவடிக்கையானது, நீண்ட கால விசாரணைக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டதாக மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
குறித்த யுவதி துபாயில் உள்ள பொறளை மெகசின் வீதியை சேர்ந்த திலன் என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமான போதைப்பொருட்களை தனது வீட்டில் பொதி செய்து 07 வருடங்களாக விற்பனை செய்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட யுவதியின் பெற்றோர் இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த யுவதி கைது செய்யப்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட யுவதியின் அலுமாரியில் இருந்து போதைப்பொருளை் கடத்தலுடன் தொடர்புடையவர்களின் பெயர்கள் அடங்கிய புத்தகம் ஒன்று கிடைத்துள்ளதாகவும் மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.