Bootcamp உலகளாவிய AI தொழில்நுட்ப மாநாடு மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு



Bootcamp உலகளாவிய AI தொழில்நுட்ப மாநாடு (Global AI Bootcamp) இலங்கையில் முதன்முறையாக மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டது. இம்மாநாடு உலகின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதனை இலங்கை தொழில்நுட்ப சமூகம் (Sri Lankan Tech Community) ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் AI தொழில்நுட்பத்தினை தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன, மேலும் Microsoft நிறுவனம் தொழில்நுட்பத்தை எவ்வாறு அன்றாட வாழ்க்கையில் இலகுவாக மக்களுக்குப் பயனளிக்க முடியும் என்பதைக் குறித்து முக்கிய அமர்வுகள் நடத்தப்பட்டன. முதன்மைப் பொறியியலாளர் (Principal Engineer) மற்றும் ஆசிய பிராந்திய Microsoft பயிற்சியாளர்களின் தலைவர் விக்னராஜ், சிரேஸ்ட பொறியியலாளர் (Senior Engineer) மற்றும் இலங்கைக்கான Microsoft பயிற்சியாளர்களின் தலைவர் ஹட்ஷனா ஆகியோர் தங்களது அறிவுரைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

மேலும், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் சோதீஸ்வரன் மற்றும் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் சுஹைல் ஆகியோர் தொழில்நுட்பத்தின் செயன்முறைகள் குறித்து பயிற்சிகள் வழங்கினர்.

இம்மாநாட்டிற்கு இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 200க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதனை ICBT, TechNet Online Academy, DigitalTeam, Berendina, Global Learning Campus போன்ற நிறுவனங்கள் அனுசரணை வழங்கியிருந்தன.