அவசர முறைப்பாட்டை விசாரிக்கச் சென்றிருந்தபோது, 16 வயது சிறுமியை அவரது வீட்டின் அறைக்குள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக ஒரு பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் திஸ்ஸமஹாராம பொலிஸில் பணியாற்றும் ஒரு சார்ஜென்ட் ஆவார்.
திஸ்ஸமஹாராமவைச் சேர்ந்த மேற்கூறிய சிறுமி, வீட்டில் குழப்பமான முறையில் நடந்துகொள்வதாக 02 ஆம் திகதி இரவு பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு 119 க்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து, பொலிஸ் நிலையத்தில் இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கூறிய சந்தேக நபர், சிறுமியின் வீட்டிற்கு சென்று சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது.
ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதாகக் கூறிச் சென்ற சிறுமி தனது காதலனுடன் கிரிந்த பகுதிக்கு சென்றதாக அவரது தாய்க்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அது தொடர்பில் மகளிடம் தாய் விசாரித்த போது அச்சிமி வீட்டில் வன்முறையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து விசாரிக்க சிறுமி தங்கியிருந்த அறைக்கு சென்ற சந்தேக நபர், சிறுமியுடன் பேசிக் கொண்டிருந்த போது பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.