சம்மாந்துறையில் கசிப்புடன் இருவர் கைது!


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலவக்கரை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் 19 ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்புடன் இரண்டு சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று (12) புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை தடுப்பு ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரமுனை 04 பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஆணொருவரும், வீரமுனை 01 பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 13 ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்பும், மற்றவரிடமிருந்து 6 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.