பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு - மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு !


யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி , சித்திரவதை புரிந்தமையால் மாணவனின் காது கேட்கும் திறன் குறைவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

மகன் மீதான தாக்குதல் சம்பவம் மற்றும் சித்திரவதை ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , மகனின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் மாணவனின் தந்தை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவன், நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 27 ஆம் திகதி வியாழக்கிழமை பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து அம்மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கிய சிரேஷ்ட மாணவர்கள், தலைக்கவசத்தாலும் தாக்கியுள்ளனர்.

தாக்குதல் காரணமாக மயக்கமடைந்த மாணவனுக்கு கட்டாயப்படுத்தி பனடோல் பருக கொடுத்து, தனியார் விடுதியிலிருந்து துரத்தி விட்டுள்ளனர்.

பின்னர், குறித்த மாணவன் கூகுள் வரைபட உதவியுடன் தனது பல்கலைக்கழக விடுதிக்குச் சென்று அங்கிருந்து அம்புலன்ஸ் மூலமாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

தாக்குதல் மற்றும் சித்திரவதைக்குள்ளான நாத்தாண்டியா பகுதியை சேர்ந்த மாணவன் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக நீதியானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உடலளவிலும், உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட தனது மகனுக்குப் பாதுகாப்பளிக்குமாறும் கோரியுள்ள தந்தை, பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.