
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் கடந்த 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு நாளை 19 ஆம் திகதியுடன் நிறைவிற்கு வரவுள்ளதாக தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக கடந்த 3 ஆம் திகதி முதல் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் தமது கட்டுப்பணத்தை செலுத்தி வரும் நிலையில் நாளையுடன் குறித்த நடவடிக்கைகள் நிறைவிற்கு வர உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம்.சுபியான் தெரிவித்துள்ளார்.
அத்தோடு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களிடமிருந்து தமது வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று (17) திகதி முதல் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 20 திகதி வரை வேட்பு மனு தாக்கல் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 12 உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள 144 வட்டாரங்களில் இருந்து 146 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 444 வாக்களிப்பு நிலையங்கள் ஊடாக 455,520 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
* மட்டக்களப்பு மாநகர சபையின் 20 வட்டாரங்களில் இருந்து 33 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக, 69 வாக்களிப்பு நிலையங்களில் 701 24 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
* ஏறாவூர் நகர சபையின் 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 20561 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
* காத்தான்குடி நகர சபையில் 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக
34686 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
* ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் 30 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 67450 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
* கோறளைப்பற்று பிரதேச சபையின் 23 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 58318 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
* கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் 18 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 24659 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
* கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையில் 18 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 20436 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
* மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் 20 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 50612 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
* மண்முனைப்பற்று பிரதேச சபையின் 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 26931 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
* மண்முனை மேற்கு பிரதேச சபையின் 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 25723 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
* மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 21868 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
* பேரதீவுப்பற்று பிரதேச சபையின் 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 34154 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி ஆகிய நகர சபைகள் உள்ளிட்ட ஏனைய 9 பிரதேச சபைகளுக்குமாக மொத்தமாக 144 வட்டாரங்களில் இருந்து 146 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் 2 அங்கத்தவர்களும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையில் ஒரு வட்டாரத்தில் 2 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட இருக்கின்றார்கள். அந்த வகையில் மாவட்டத்தில் நேரடியாக 146 உறுப்பினர்களும் மேலதிக உறுப்பினர்களாக 128 உறுப்பினர்களுமாக மொத்தமாக 274 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அதேவேளை மாவட்டத்தில் தேர்தல் பிணக்குகள் தீர்க்கும் நிலையம் மார்ச் 17ம் திகதி முதல் பழைய மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வன்முறையுடனான முறைப்பாடுகளை நேரடியாகவே அல்லது வட்ஆப் இலக்கம் மூலம் அல்லது தொலைபேசி ஊடாகவே ஈமெயில் ஊடாகவே தெரிவிக்கமுடியும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலரும், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தெரிவத்தாட்சி அலுவலருமான சட்டத்தரணி எம்.வீ.எம்.சுபியான் தெரிவித்தார்.