பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் தேவஸ்தான பிரமோற்ஷவப் பெருவிழா


























(ரவிப்ரியா)

ஐந்து நூற்றூண்டுகளுக்குமேல் வரலாற்றைக் கொண்டதும் தொன்மை வாய்ந்ததுமான பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் தேவஸ்தான பிரமோற்ஷவப் பெருவிழா 28.03.2025 (வெள்ளிக் கிழமை) திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

சம்பிரதாயபூர்வமாக கடல்நாச்சியம்மன் ஆலயத்தில் இருந்து அதிகாலை திருக்கொடி மேளதாளங்களுடன் பக்தர்கள புடைசூழ ஆலய வண்ணக்கரால் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பகல் 11.00 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.

கொடியேற்றத்தை தொடர்ந்து தம்பபூஜை நடனம் என்பன நடைபெற்று சுவாமி உள்வீதி வலம் வந்தார். கொடியேற்றத்தைத் தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு யாகம் , தம்பாபிஷேகம் மற்றும் பூசை என்பன நடைபெற்று சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வருவார். தொடர்ந்து பகல் இரவு பூஜை, யாகம், திருவிழா 12 குடிமக்களின், சார்பாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட திகதி ஒழுங்கின்படி சீராக போட்டித்தன்மையுடன் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

10ந் திகதி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெறும். மறுநாள் வெள்ளி அதிகாலை கிரியைகளைத் தொடர்ந்து சமுத்திர தீர்த்தோற்ஷபம் இடம்பெற்று 12ந் திகதி சனியன்று காலை சங்காபிஷேகமும் மாலை பூங்காவனத் திருவிழாவும் நடைபெற்று 13 ஞாயிறு காலை பிராயச்சித்த அபிஷேகமும மாலை வைரவர் பூசையும் நடைபெற்று மஹோற்ஷபம் நிறைவுறும்.

மஹோற்ஷபம் ஆலய வண்ணக்கர் செ.கனகசுந்தரம் ஜே.பி தலைமையில் ஆரம்பமாகி நடைபெறும். மஹோற்ஷப ஸ்தானகாச்சாரியராக ஆலயத்தின் பிரதம குரு சிவாகமரெத்னா சிவஸ்ரீ இரா.கு.நடேசடுணஸ்காந்தக் குருக்களின் பங்களிப்புடன் மஹோற்ஷப குரு சாதகசிம்மம் சிவாகமசேகரர் பிரம்மஸ்ரீ நித்திய சிவானந்தக் குருக்கள் தலைமையில கிரியைகள் நடைபெறும்.

தினமும் ஆன்மிக நிகழ்வுகளை இந்து இளைஞர் மன்றம், சாயி சமித்தி என்பன இணைந்து மேற் கொள்வதுடன் தினம் மதிய நேரத்தில் அன்னதானமும் இம்பெறும். கதிர்காம பக்தர்களினால் ஊன்றிய வேல் மீள எடுக்கமுடியாது உறுதியாக இருந்த இடமே ஆலயம் அமையப்பெற்ற இடம். ஆலய புனருத்தாரண வேலையின்போது சுமார் தென்னைமர உயரத்தில் இருந்து தவறி தார் வீதியில் விழுந்த பிள்ளையார் சிலை சிதைவேதுமின்றி அப்படியே இருந்ததாகவும், அது இப்புபோதும் ஆலயத்தில் உரியபீடம் அமைத்து வைக்கப்பட்டிருப்பதும் பாரிய இயற்கை அனர்த்த காலங்களிலும் ஆலயம் அப்படியே இருந்த ஒரே ஆலயம் என்பதும் இவ்வாலயத்தின் தனித்துவங்களாகும்.