தெங்கு அபிவிருத்தி குறித்த அரசாங்கத்தின் திட்டம் தோல்வியடைந்துள்ளது - சாணக்கியன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சம் தென்னை மரங்கள் வெள்ளை ஈ நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் மருந்துக்காக 50 லீற்றர் வேப்பெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. 4இலட்சம் மரங்களுக்கு 50 லீற்றர் எண்ணெயை எவ்வாறு பகிர்ந்தளிப்பது. தெங்கு அபிவிருத்தி குறித்த அரசாங்கத்தின் திட்டம் தோல்வியடைந்துள்ளதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
வடக்கு மாகாணத்தில் தெங்கு முக்கோண வலயத்தை உருவாக்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இலட்சக்கணக்கில் தென்ங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், அவை இலவசமாக வழங்கப்படுவதாகவும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 8 இலட்சம் தென்னை மரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் 4 இலட்சம் மரங்கள் வெள்ளை ஈ நோய் தாக்குதலுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள மரங்களை பாதுகாக்காவிடின் அவை இறந்து விடும்.

இருக்கும் மரங்களை பாதுகாக்காமல் இலவசமாக தென்னை கன்றுகளை வழங்குவது பயனற்றது. மட்டக்களப்பில் வெள்ளை ஈ நோய் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டுள்ள மரங்களுக்கு மருந்துக்காக பயன்படுத்துவதற்கு பெருந்தோட்ட அமைச்சு ஊடாக 50 லீற்றர் வேப்பெண்ணை வழங்கப்பட்டுள்ளது. 4 இலட்சம் மரங்களுக்கு 50 லீற்றர் எண்ணெயை எவ்வாறு பகிர்ந்தளிப்பது.

தெங்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும். தென்னை மரங்களை தாக்கியுள்ள வெள்ளை ஈ பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்று கேள்வியெழுப்பினார்.