மகளின் போக்குவரத்துக்கு அரச வாகனத்தை பயன்படுத்திய முன்னாள் பிரதானி !


கிழக்கு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய மகளின் போக்குவரத்துக்காக, நீண்ட காலமாக, வாகனம் மற்றும் எரிபொருளை பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதானி ஒருவர் பயன்படுத்தியுள்ளது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாராளுமன்ற வாகனம், அம்பாறை பிரதேசத்துக்கு அடிக்கொரு தடவை சென்றுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை தொடர்பில் தேடி பார்த்த போதே, இந்த தகவல் வெளியாகியுள்ளது என அறியமுடிகின்றது.

இந்த பிரதானி, தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, இரண்டு வாகனங்களை கடந்த பத்து வருடங்களாக பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வாகனங்களுக்காக வரையறை இன்றி, எரிபொருளை பயன்படுத்தி வந்துள்ளார் என்பதும் விசாரணை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் முன்னாள் பிரதித் தலைவர் மற்றும் செயலாளர் நாயகமாக கடமையாற்றியவர்கள், கடந்த 10 வருடங்களாக வாகனம் மற்றும் எரிபொருள்களை பயன்படுத்திய முறைமை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை இடுவதற்காக, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன கட்டளை இட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விசாரணைகள் ஊடாக, பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதானிகள், பயன்படுத்தி வாகனங்கள் மற்றும் எரி பொருட்கள் தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.