தென்னக்கோன் சரணடைந்தார் : அவரை கைதுசெய்ய முடியாமைக்காக அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் - சமிந்த விஜேசிறி !


தேசபந்து தென்னக்கோன் கைது செய்யப்படவில்லை. அவர் தான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். ஊழல்வாதிகளை பிடிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கம் 75 ஆண்டுகால அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் மீது சேறு பூசுகிறது. அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு கையெழுத்தின் ஊடாக அரிசி மாபியாக்களை முடிவுக்கு கொண்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆட்சிக்கு வந்து நாளையுடன் ஆறு மாதங்கள் நிறைவடைகின்றன.

ஆனால் ஏதும் செய்யவில்லை. 75 ஆண்டுகால அரசியலை சாபம் என்று விமர்சித்தீர்கள். ஊழல் மோசடி தொடர்பான கோப்புக்கள் இருப்பதாக குறிப்பிட்டீர்கள். ஆனால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

ஆட்சிக்கு வந்ததன் பின்னரும் 75 ஆண்டுகால அரசாங்கத்தை விமர்சித்துக் கொண்டிருக்கின்றீர்கள். வெட்கப்பட வேண்டும். பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை நீங்கள் பிடிக்கவில்லை. அவர் தான் நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

ஆளும் தரப்பின் பின் வரிசை உறுப்பினர்கள் அரசாங்கத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள். நாங்களும் எமது அரசாங்கத்தில் தலைவர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.

ஆனால் அது பொய் என்பதை பின்னர் தெரிந்துக் கொண்டோம். ஆளும் தரப்பில் முன்வரிசையில் ' டை கோட்' அணிந்திருப்பவர்கள் ஊழலுக்கு துறைபோனவர்கள். நாங்கள் கூறுவதை ஆளும் தரப்பின் பின் வரிசை உறுப்பினர்கள் வெகுவிரைவில் விளங்கிக் கொள்வார்கள்.

கடந்த காலங்களில் அநுரகுமார திசாநாயக்க, பிமல் ரத்நாயக்க மற்றும் சுனில் ஹந்துனெத்தி ஆகியோர் பாராளுமன்றத்தில் ஊழல் மோசடிகள் பற்றி பேசுவார்கள்.

பின்னர் பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் ஊழல்வாதி என்று குற்றஞ்சாட்டிய நபருடன் அமர்ந்து மதிய உணவை உட்கொள்வார்கள். இதுதான் உண்மை.

இந்த விடயம் தொடர்பில் ஆளும் தரப்பின் பின்வரிசை உறுப்பினர்கள் பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

வெள்ளைப்பூண்டு மோசடி, தேங்காய் எண்ணெய் மோசடி உட்பட பல மோசடிகளை பற்றி பேசினீர்கள், ஆட்சிக்கு வந்து ஓரிரு வாரத்துக்குள் ஊழல்வாதிகளை தண்டிப்பதாகவும் குறிப்பிட்டீர்கள்.

ஆனால் இன்று எதிர்க்கட்சிகள் மீது சேறுபூசிக் கொண்டிருக்கீன்றீர்கள். ரணிலை பற்றி அரசாங்கம் நன்கு அறியும், அரசாங்கத்தை பற்றி ரணிலும் நன்கு அறிவார். எதிர்வரும் காலங்களில் மக்கள் மத்தியில் அரசாங்கத்தால் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றார்.