
மாத்தறை – தெவிநுவர பகுதியில் கடந்த 21 ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் புத்தளம் வென்னப்புவை பகுதிக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
தெவிநுவர பகுதிக்கு கடந்த 21 ஆம் திகதி இரவு 11.45 மணியளவில் வேனில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தெவிநுவர பகுதியைச் சேர்ந்த கசுன் தாரக்க என்ற 29 வயதுடைய இளைஞனும் யொமேஷ் நதீஷான் என்ற 28 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு உயிரிழந்தனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் வென்னப்புவை பகுதிக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.