மட்டக்களப்பில் இடம் பெற்ற மகளிரை வலுப்படுத்தும் விற்பனைக் கண்காட்சி



(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் கிறிசலிஸ் நிறுவனமும் இணைந்து மகளீர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த விற்பனைக் கண்காட்சியும் சந்தையும் நேற்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.

"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்" எனும் தொனிப்பொருளில் கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள ஸ்ரீ முருகன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற விற்பனைக் கண்காட்சிக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் திட்ட உத்தியோகத்தர் மிச்சேல் மற்றும் கிறிசலிஸ் நிறுவனத்தின் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், கிறிசலிஸ் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் என பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, சண் சைன் கிரண்ட் விடுதியில் இடம் பெற்ற பிரதான நிகழ்வின் போது கிறிசலிஸ் நிறுவனத்தின் உதவித் திட்டங்கள் ஊடாக தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் சிறந்த பெண் முயற்சியாளர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தின் மாணவர்களின் அழகிய நடனம், சிசிலியா பெண்கள் கல்லூரி மாணவர்களின் இசைக் கச்சேரி என்பன இடம் பெற்று, சுயதொழில் முயற்சியாளர்களுக்கான உதவித்திட்டங்களும் இதன் போது அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து சிறந்த சுய தொழில் முயற்சியாளர்களின் அனுபவப் பகிர்வு இடம் பெற்றதனைத் தொடர்ந்து நூற்றிற்கும் அதிகமான பெண் சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளின் விற்பனைக் கண்காட்சி பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் உள்ளிட்ட அதிதிகளினால் திறந்து வைக்கப்பட்டது.

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமாதானத்தின் பயணம் எனும் கிறிசலிஸ் நிறுவனத்தின் திட்டத்திற்கு அமைவாக.
பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளில் இருந்து மீண்டு சுய தொழில் வாண்மையை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இடம் பெற்று வருகின்றது.

பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் முயற்சியாண்மையை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட செயலகத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன் அவர்களது வழி நடத்தலில் சுய தொழில் முயற்சிப் பிரிவும், மகளீர் அபிவிருத்திப் பிரிவும் இணைந்து பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.