போலி இலக்கத் தகடுகள் கொண்ட வாகனங்களுடன் மூவர் கைது



சுங்கவரி செலுத்தாமல் கொண்டுவரப்பட்டு, போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வைத்திருந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் பெல்மடுல்லை பொலிஸாரால் நேற்று (04) கைது செய்யப்பட்டனர்.

சுங்கவரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட ஜீப் வாகனம் ஒன்றும், மோட்டார் வாகனம் ஒன்றும் பெல்மடுல்லை பொலிஸ் நிலைய பிரிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டன.

பெல்மடுல்லை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, பெல்மடுல்லை பொலிஸ் அந்த இரு வாகனங்களையும் காவலில் எடுத்து விசாரணைகளை ஆரம்பித்தது.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, நேற்று மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, மேற்குறிப்பிட்ட வாகனங்களை வைத்திருந்தமை, சுங்கவரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டுவந்தமை மற்றும் போலி இலக்கத் தகடுகள் பொருத்தி பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 49, 59 மற்றும் 61 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் எம்பிலிபிட்டிய மற்றும் மாமடல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் நேற்று பெல்மடுல்லை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், மார்ச் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

பெல்மடுல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.