சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து ஜீப் வாகனம் விபத்து ; இருவர் படுகாயம்


நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் பிளக்பூல் சந்தி பகுதியில் ஜீப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

வேக கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கினிகத்தேனவியில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த ஜீப் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, ஜீப் வாகனத்தில் பயணித்த மூவரில் இருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜீப் வாகனத்தின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.