அநுர அரசுக்கு ஏப்ரல் 21 வரை காலஅவகாசம் - பேராயர் !


இலங்கையிலுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கிலேயே தற்போதுள்ள ஆட்சியாளர்களை ஆட்சிபீடத்துக்கு ஏற்றினோம். ஆனால் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்தாமலும் எமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் இருந்து வந்தால் நாம் மீண்டும் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படுமென கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தற்போதுள்ள அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அத்துடன், லசந்த விக்ரமதுங்க கொலை, பிரதீப் எக்னெலியகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீய்த் நொயர் தாக்கப்பட்டமை உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும், உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு தற்போது ஆட்சிபீடம் ஏறியுள்ள அரசாங்கம் இனியும் காலம் தாழ்த்தக்கூடாது.

இந்த விடயங்கள் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் இரகசியமாக வைத்துக்கொள்ளாமல், எவருடனும் 'டீல்' போடாமல் உண்மையை வெளியே கொண்டு வருவதற்கு விரைந்து செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்றுடன் 6 ஆவது ஆண்டு நிறைவு தினத்துக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்று பெற்றுக்கொடுப்பதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் நாம் வீதியில் இறங்குவதற்கு பின்னிற்க மாட்டோம் எனவும் பேராயர் குறிப்பிட்டார்.

2025 ஜூபிலி ஆண்டை முன்னிட்டு கொழும்பு மறை மாவட்ட மக்கள் தொடர்பு மத்திய நிலையத்தினால் கொழும்பு பேராயர் இல்லத்தில் சனிக்கிழமை (15) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

நாட்டில் ஊடகச் சுதந்திரம், மானுடத்துவம், மக்கள் சுயாதீனமாக இருத்தல் போன்றவற்றை நிலைநாட்டுவதற்கும், நாட்டில் புதிய கலாச்சாரத்தை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். இதற்காகத் தான், நாம் உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தோம்.

தற்போது உங்களிடம் உள்ள ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு சட்ட திட்டங்களை திருத்துங்கள். அவற்றை திருத்துவதற்கு இனியும் காலவேளை தேவையில்லை. சட்டம் திருத்தப்பட வேண்டும் என கூறிக்கொண்டு இனியும் கால தாமதம் ஏற்படுத்தாதீர்கள்.

இந்நாட்டில் 1978 அரசியலமைப்பில் தனி ஒரு நபர் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன்வசப்படுத்துவற்கான சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த 1978 அரசியலமைப்பின் பின்னர், ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, ஊடகவியலாளர்கள் காணாமலாக்கப்பட்டமை உள்ளிட்ட ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது. இவற்றுக்கு முழு காரணமும் அரசியல் தலைவர்கள் ஆவர்.

லசந்த விக்ரமதுங்க கொலை, பிரதீப் எக்னெலியகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீய்த் நொயர் தாக்கப்பட்டமை உள்ளிட்ட இன்னும் பல ஊடகயவியலாளர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து எந்தவொரு சட்ட நடவடிக்கைகளும் இல்லை. அவர்களுக்கு நீதியும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

தற்போதுள்ள அரசாங்கமும் இந்த விடயங்கள் தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா குறித்து எனக்குத் தெரியாது. உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் சம்பவம் குறித்தும் எமக்கு அதனையே கூற வேண்டியுள்ளது.

பலதரப்பட்ட வகையில் எமக்கு வாக்குறுதி அளித்தார்கள். வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கினர். எனினும், ஒரு வாக்குறுதியை கூட இதுவரை நிறைவேற்றவில்லை.

இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் பிரிவினைகளை ஏற்படுத்தி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி, தேர்தல்களின்போது வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளே 1948 ஆம் ஆண்டிலிருந்து எமது அரசியல் தலைவர்கள் எமது நாட்டில் செய்து வருகின்றனர்.

இவ்வாறு, எமது அரசியல் தலைவர்கள் இனங்களுக்கிடையே, மதங்களுக்கிடையே குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்ளும் ஓர் சமூகமாக இந்நாட்டு மக்களை உருவாக்கியதுடன், அவர்கள் சொல்வதை செய்யும் அடிமைகளாக்கினர்.

பட்டலந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ள விடயங்கள் மிகவும் மோசமான சம்பவங்களாகும். ஊடகங்களுக்கு வரம்பு நிலையை கொண்டு வருவதற்கு கடந்த அரசாங்கம் முயற்சித்திருந்தது. நல்ல‍ வேளையாக இது சட்டமாக்கப்படவில்லை. அவை சட்டமாக இயற்றப்பட்டால் எவரும் கருத்து தெரிவிக்க முடியாது வாயை மூடியிருக்க வேண்டியதுதான்.

இவ்வாறு கொண்டு வருவதற்கு காரணம் என்னவெனில், நம்மில் பலர் பக்கச்சார்பாக சிந்திப்பதுதான். சில ஊடகங்களும் பக்கச் சார்பாக செயற்படுவதுண்டு. இவ்வாறு அவர்கள் செயற்படுவதனால் உண்மைத் தன்மையை மக்கள் அறிய முடியாமல் போகின்றது.

இந்த முறைமையை மாற்றியமைக்க வேண்டும். இந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றி அமைப்பற்காகவே, நாம் இந்த அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கான காரணமாகும். இந்த அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் நாம் மீண்டும் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஆகவே, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். விசேடமாக ஊடகச் சுதந்திரம், மானுடத்துவம், சுயாதீனமாக இருத்தல் போன்றவற்றுக்கு தடையாக இருக்காதீர்கள். இந்த கலாச்சாரத்தை நிறுத்திவிடுங்கள். இலங்கையில், புதிய சிந்தனைகள், புதிய புதிய கலாச்சாரத்தை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். இதற்காகவே நாம் உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்தோம்.

இதனை செயற்படுத்துவதற்கான சட்ட திட்டங்களை மாற்றி அமையுங்கள். மாற்றியமைப்பதற்கு காலம் எடுக்கத் தேவையில்லை. தங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாகில், அந்த அதிகாரத்தை பயன்படுத்தி அவற்றை மாற்றியமைக்க முடியும்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு இனியும் காலம் தாழ்த்தக்கூடாதென்றும், இவ்விடயம் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் இரகசியமாக வைத்துக்கொள்ளாமல், எவருடனும் 'டீல்' போடாமல் உண்மையை வெளியே கொண்டு வருவதற்கு தற்போது ஆட்சியுள்ள அரசாங்கம் விரைந்து செயற்படுவது அவசியம்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்றுடன் 6 ஆவது ஆண்டு நிறைவு தினத்துக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்று பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அவ்வாறு எமக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் நாம் வீதியில் இறங்குவதற்கு பின்னிற்க மாட்டோம். ஆட்சிபீடம் ஏறியதன் பின்னர் கட்டுவப்பிட்டிக்கு வந்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தவறாதீர்கள் என்றார்.