கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலிருந்து தோட்டா மீட்பு !


கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலிருந்து இன்று திங்கட்கிழமை (10) அதிகாலை 09 மில்லிமீட்டர் நீளமுடைய தோட்டா ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய பணிப்பெண் ஒருவர் இன்றைய தினம் அதிகாலை 03.15 மணியளவில் விமான நிலைய வருகை முனையத்தில் தோட்டா ஒன்று கிடப்பதை கண்டு, அதனை உடனடியாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தோட்டாவை மேலதிக விசாரணைகளுக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.