திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பௌதீக மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்வு வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளேன். பாற்பண்ணையாளர்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டங்கள் அமுல்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான 4 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலுவுத் திட்டத்தில் ஒருசில சிறந்த விடயங்களும் உள்ளக்கப்பட்டுள்ளன.இருப்பினும் திருத்தப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. வரவு செலவுத் திட்டத்தின் முழுமையான ஒதுக்கீட்டுக்கு அமைய கிழக்கு மாகாணத்துக்கு ஒருசில அபிவிருத்திகள் கிடைக்கப்பெறும்.
ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் எவ்வாறான பங்கு அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு கிடைக்கும் என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.இந்திய அரசாங்கத்தினால் நிதியுதவியளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் அணுசரனையுடன் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதி எந்தெந்த கருத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தளவுக்கு எமது மக்களுக்கு பயனளிக்கும் என்பது வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
விசேடமாக அம்பாறை மாவட்டத்தில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்திய அரசுக்கு இந்த சபையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு இந்திய அரசு 75 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்காக ஒதுக்கிய நிதியை கடந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்தினார்கள். அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிக வளம் காணப்படுகிறது.ஆனால் திருக்கோவில் வைத்தியசாலைக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. ஆகவே இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இந்த வைத்தியசாலைக்கு போதுமான நிதியை ஒதுக்கிக் கொடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
அம்பாறை மாவட்ட மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். பாற்பண்ணையாளர்களை பாதுகாக்க வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள வட்டமடு 1976 ஆம் ஆண்டு மேய்ச்சல் தரையாக வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2010 ஆம் ஆண்டு வனவளத்திணைக்களம் மேய்ச்சல் தரையை இணைத்து எல்லை நிர்ணயம் செய்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாற்பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரை பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் உடன் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.