ஆரையம்பதியில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது 5 பேர் கொண்ட வாள்வெட்டு குழு மேற்கொண்ட தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வியாழக்கிழமை (20) மாலை 6 மணியளவில் 5 பேர் கொண்ட குழு ஒன்று வாள்களுடன் நுழைந்து தாக்குதல் நடாத்தியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் . இதில் தாக்குதலை மேற்கொண்டு தப்பி ஓடிய தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது
ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் சம்பவதினமான வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மின்னொளியில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர் இதன் போது அங்கு வாள்களுடன் நுழைந்த 5 பேர் கொண்ட வாள் வெட்டுக்குழு ,விளையாடிக் கொண்டிருந்த சிலர் மீது துரத்தி வாளால் வெட்டி தாக்குதல் நடாத்தியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு தாக்குதலை நடாத்திய வாள்வெட்டுகுழுவினர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதுடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கோவில் ஒன்றில் காயமடைந்தவர்களுக்கும் தாக்குதலை நடாத்திய வாள்வெட்டுக் குழுவிற்கும் இடையே இடம்பெற்ற தகராற்றினையடுத்து பழிவாங்கும் நோக்கோடு இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.