துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லங்கள் தொடர்பான தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் !


துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான தற்காலிக பாதுகாப்பு இல்லங்களின் நிர்வாகம் தொடர்பான தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்குதல் அரசினால் நிறைவேற்றப்படவேண்டிய பொறுப்பாகும் என கருதப்படுகிறது.

அதற்கமைய, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் 10 மாவட்டங்களில் பாதுகாப்பு இல்லங்கள் இயக்கப்படுவதுடன், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து மேற்குறித்த இல்லங்களின் செலவுகள் மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் நுவரெலியா மாவட்டத்திலும் புதிய பாதுகாப்பு இல்லம் நிறுவப்பட்டுள்ளது.

மேற்குறித்த தற்காலிக பெண்களுக்கான பாதுகாப்பு இல்லத்தையும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இயக்கும் பாதுகாப்பு இல்ல வலையமைப்பில் இணைப்பதற்காக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.