பல்லவர் பாண்டிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட சோழப்பேரரசின் தோற்றம் கி.பி 880 உதயமாகி கி.பி 1279 வரை நிலைப்பெற்றுள்ளது. சோழ பரம்பரையின் ஆக்கத்திற்கு வித்திட்டவன் சோழ குலத்தின் முதல் மன்னனான விஜயலாய சோழன் ஆவான். சோழர் ஆட்சியின்போது அமைதியும் அரசர்களிடம் இருந்து அஞ்சாமை வீரம் கொடை,கலைகளின் வளர்ச்சி சமயப் பொறை, பொருளாதாரம் வைதிக சமயம் மற்றும் பல் துறையில் உயர்ந்த இடத்தை பெற்றதனால் பொற்காலம் என வர்ணிக்கப் படுகின்றது.
சோழர் காலத்தில் முதன்முறையாகத் தென்னிந்தியா முழுவதும் ஒரே அரசின் கீழ் இருந்தது. உழவுக்கும் தொழிலுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர். வாணிகககுழுக்கள் அமைத்தல், வெளிநாட்டுக்கு தூதுக் குழுக்களை அமைத்தல் என உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாணிகத்தை வளர்த்தனர். நாட்டு நிர்வாகத்திலும் நீதி விசாரனையிலும் சோழர்கள் காலத்தில் பல அறிவுப்பூர்வமான மாற்றங்கள் விளைந்தன. கிராமங்களில் ஊராட்சி தழைத்தோங்க வாரியங்கள் அமைத்தனர். நீதிமுறையையும் நிலைக்கச் செய்தனர். எனினும் வரி விதிப்பில் மக்கள் தங்களை விற்றுக் கொள்ளவும் செய்தனர். ஆகவே இனி சோழர்காலத்தில் பொருளாதார கட்டமைப்பு குறித்து பரிசீலனை செய்வோம்.
உள்ளடக்கம்
சோழர்கால பொருளாதாரத்தை பரிசீலனை செய்யும் போது சோழர்களின் ஆட்சியில் வாணிப பொருளாதாரமும் விவசாய வருவாய் நிலவரி மற்றும் பல வரிகளும் சோழ அரசின் முக்கிய வருவாயாக விளங்கியது . அரசரே அனைத்து நிலங்களின் உரிமையாளர் நாட்டின் வரவு செலவு கணக்குகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். பொதுப்பணி துறை நீதித்துறை, இராணுவம், கல்வி, கோவில்கள், நீர்ப்பாசனம், அரசன், அரசவை, அரசாங்கம்,அலுவலகங்கள் ஆகியவற்றின் செலவுகளுக்கு அரசாங்கம் பணம் பயன்படுத்தப்பட்டது. சோழ அரசர்கள் பொன், வெள்ளி, செப்பு, நாணயங்களை வெளியிட்டனர். வியாபாரிகளின் பொருளாதாரம் முக்கியமாக விவசாயத்தையும் சார்ந்திருந்தது விவசாயமே மக்களின் முக்கியத் தொழிலாக இருந்தது நில உரிமையாளர் ஆய் இருப்பதே சமுதாயத்தில் மிகவும் மதிப்பிற்குரியதாயிருந்தது நிலக்கிழார்கள் கிராம நிர்வாக அமைப்புக்களின் உறுப்பினர்களாக இருந்தனர் பொதுவாக சோழர்காலத்தில் மக்களின் பொருளாதார நிலை நன்றாக இருந்தது.
சோழர் காலத் தமிழகம் விவசாயத்தால் வீறுபெற்றும், வாணிகத்தால் வளம் பெற்றும் இலங்கியது. இவ்விரு தொழில்களையும் செய்வோர் சமுதாயத்தில் சீரும் சிறப்புமாய், செந்தமிழ் நாட்டில் வாழமுடிந்தது. மக்களில் பெரும்பான்மையோர் விவசாயத் தொழிலிலீடுபட்டு நாட்டை வளப்படுத்தினர். நிலங்கள் தனிப்பட்டோர் உடமைகளாகவும், பொது நிலங்களாகவும் இருந்தன. வெற்றி வீரருக்கும், அந்தணருக்கும் நிலங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன. கோவில்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நிலம் தேவதான நிலம் என வழங்கப்பட்டது. இக்காலத்தைப்போல் அக்காலத்திலும் மக்கள் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துப் பயிரிட்டனர். 'சோழ நாடு சோறுடைத்து' ஆதலால் நாடெங்கணும் இலவச உணவு விடுதிகள் மக்களுக்கு உண்டிகொடுத்து உயர் நிலையில் விளங்கின. உழுவுதொழிலே நாட்டின் உயிர் நாடி என்பதை மன்னர்கள் உணர்ந்ததால் நீர்ப்பாசன வசதி பல செய்துதரப்பட்ட. கால்நடைகள் போற்றி வளர்க்கப்பட்டன.
சோழர் கால வணிகப் பாதை
விவசாயத்தைப் போன்றே சோழர் காலத்தில் வாணிகமும் சிறந்து விளங்கியது. சோழர்காலத்தில் பொருளாதாரக் கட்டமைப்பில் வாணிபம் பெரும் முக்கியத்துவத்தை நோக்கினாள் குடிசைத்தொழில் வளர்வதற்கு சோழ அரசர்கள் மிகவும் பங்காற்றினர். அதாவது உலோக சிலைகள் வீட்டில் உபயோகிக்கும் பாத்திரம் மற்றும் சாமான்கள் ஆகியவை பொன், வெள்ளி, பித்தளை, செம்பு முதலியவற்றால் செய்யப்பட்டன. நகைகள் செய்யும் கலை மிகவும் சிறப்பு பெற்றிருந்தது வகைகள் மற்றும் அலங்கார ஆபரணங்கள் தங்கம் மற்றும் முத்து ஆகியவை பயன்படுத்தப்பட்டன. காஞ்சிபுரம் நெசவுத் தொழிலில் சிறந்த இடமாக திகழ்ந்தது காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளர்கள் மன்னர் அலங்கரிக்கப்பட்டிருந்தன கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் காணப்பட்ட உப்பளங்கள் மிகவும் பெருமை வாய்ந்தவை.தமிழ்நாட்டு வணிகப் பெருமக்கள் நேர்மையோடு வாணிகம் செய்தனர். தவறு செய்தால் கோவிலுக்குத் தீர்வை கட்டினர். கூட்டுமுறையிலும், தனிப்பட்ட முறையிலும் மக்கள் வாணிகம் செய்தனர்.
அரசியலார் வரிவிதிப்பும், சுங்கமும் அன்று இருந்தன. வாணிகக்குழுக்கள் இன்றுபோல் அன்று வாணிக வளர்ச்சிக்காகப் பாடுபட்டன. பண்டமாற்று முறையே எங்கும் இருந்ததாகத் தெரிகிறது. நல்ல சாலைகள் இருந்தமையால் உள்நாட்டு வாணிகம் உயர்ந்திருந்தது. இதே போன்று கடல் வாணிகமும் தமிழர் செய்தனர். பாரசீகம், சீனா முதலிய நாடுகளோடு நம்மவர் வணிகத் தொடர்புடையோராய் இருந்தனர். உப்பு, ஆடையணிகளும் அக்காலத்தில் சிறந்த வாணிகப் பொருள்களாகக் கருதப்பட்டன. பத்திரம் எழுதிக் கொண்டு செல்வர்கள் பொருள் கடன் கொடுத்தனர். மக்கள் வட்டியுடன் பொருளைத் திருப்பிக் கொடுத்தனர். சொத்துக்களை விற்பதையும் மாற்றுவதையும் பதிவு செய்ய “ஆவணக்களரி” என்ற அலுவலகம் இருந்தது.
இவ் வாணிபத்தில் வெளிநாட்டு வாணிபம் முக்கிய இடத்தினை பெறுகிறது. “திரைகடல் ஓடி திரவியம் தேடு” என்பது தமிழில் வழங்கும் பழமொழி ஆகும். இதன் பொருள் கடற்பயணம் செய்து செல்வத்தை தேடு என்பதாகும். ஒரு நாட்டின் சிறந்த தொழிலாக உழவுத் தொழிலையும் கூறலாம் நாடு செழிப்புடன் இருக்க வேண்டுமானால் இவ்விரண்டு தொழில்களும் செலுத்தவேண்டும் இவ்விரண்டு காரணத்தினாலேயே சோழர்காலம் பொற்காலம் என்று கூறப்படுகின்றது.அதாவது தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் குறிப்பாக சீன நாட்டுடன் சோழர்கள் வாணிப உறவு வைத்திருந்தார்கள்.இபின் பட்டுடா,மார்கோ போலோ போன்றவர்களின் குறிப்புகள் கூறுகின்றன யானைகள், ஏலக்காய், பருத்தி மற்றும் துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அரேபிய குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன மகாபலிபுரம் காவிரிப்பூம்பட்டினம் சோலையூர் ஆகிய சோழர் துறைமுகங்கள் மூலம் அயல்நாட்டு வாணிபம் நடைபெற்றது. முதலாம் குலோத்துங்கன் தனது தாராளமான வரி கொள்கையினால் உள்நாட்டு வாணிபம் அயல்நாட்டு வாணிபம் நடைபெற்றதால் சோழப்பேரரசின் பொருளாதாரம் கலாசாரம் சமயம் ஆகிய துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது.
மேலும் சோழர்கால நாணயங்கள் சோழர்கால பொது பொருளாதார கட்டமைப்பை எடுத்துக்காட்ட உதவுகின்றது. அதாவது சோழ அரசர்கள் பொன், வெள்ளி ,செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றில் பொற்காசுகள் மிக்க குறைவாகவும் வெள்ளி செப்புக்காசுகள் அதிகமாகவும் கிடைக்கின்றன. சோழர் காலத்தில் வெளியிடப்பட்ட சோழ நாணயங்களில் சோழர்களின் சின்னமாகிய புறமும் சோழ அரசர்களின் பெயர்களும் காணப்பட்டன. ராஜராஜ சோழன் இலங்கையின் நாணயத்தைப் போன்ற நாணயங்களை நமது ராஜ்ஜியத்தில் வெளியிட்டார் .சோழ அரசர்களின் ஆட்சிக் காலங்களை வரிசைப்படுத்தவும் சோழர்கால சமுதாய பொருளாதார நிலைமைகளை அறிந்து கொள்ள உதவுகின்றது . இந்நாணயங்கள் என்று கூறினால் மிகையாகாது.
மேலும் சோழர்கால வரி முறைகளும் சோழர்கால பொது பொருளாதார கட்டமைப்பை எடுத்துக்காட்ட உதவுகின்றது. இங்கிலாந்திலே வில்லியம் என்ற பேரரசன் தன் நாட்டை அளப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முந்தியே சோழ மன்னர்கள் தங்கள் நாட்டு விளைநிலங்களை நேர்மையான முறையிலே அளந்து பதிவும் செய்தார்கள். நிலங்கள் வேலி முறையில் கணக்கிடப்பட்டன. தஞ்சை, திருச்சி முதலிய மாவட்டங்களிலே இன்றும் குழி அல்லது வேலிக் கணக்கிலேயே நிலங்கள் குறிக்கப்படுகின்றன. ஒரு வேலி என்பது இக்காலத்தில் 63 ஏக்கருக்குச் சமமாகும். நிலங்களை அளக்கப் பயன்படுத்திய அளவுகோல் சீபாதம் (Sripadam) எனப்படும். நிலவரி தானியமாகவோ, பணமாகவோ, தானியமும் பணமுமாகவோ செலுத்தலாம் என்ற முறை அக்காலத்தில் நிலவியது. வரி செலுத்தப்படாத நிலங்கள் மகாசபைக்குச் சொந்தமாகிடும். இவ்வாறு நிலத்தை இழந்தவரும் அவர் உறவினரும் தீண்டத்தகாதவர்களாகச் சமுதாயம் எண்ணியது. வெள்ளம் ஏற்பட்டபோதும், பஞ்சம் ஏற்பட்டபோதும் வரிகள் வாங்கப்படவில்லை. நாணயம், காசு என்று அழைக்கப்பட்டது. காசு என்பது தங்க நாணயமாகும். உழவர்களுக்குக் கடன்களும் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. கடனுக்குரிய வட்டித்தொகை நெய்யாகவும், எண்ணெய்யாகவும் பிற பொருளாகவும் கொடுக்கப்பட்டது.
சோழர் காலத்தில் அரசாங்கத்திற்கு நிலவரி மூலம் தான் அதிகமான வருவாய் வந்தது. தஞ்சை போன்ற வளமான மாவட்டங்களிலுள்ள மக்கள் ஒரு வேலிக்கு 100 கலம் நெல் வரியாகத் தந்தார்கள். மேலும் சோழர் காலத்தில் பல வரிகள் போடப்பட்டபோதிலும், அவையெல்லாம் வெறும் வரிகளாக இருந்தனவே தவிர பணம் தரக்கூடிய வரிகளாக இருக்கவில்லை. தோட்டவாரிய வரி முதலிய பல வரிகள் போடப்பட்டன. உப்பள வரி, காட்டு வரி, சுரங்க வரி போன்ற வரிகள் ஓரளவுக்கு நல்ல வருவாயை அரசுக்குத் தந்தன. கலம், மரக்கால், நாழி, உழக்கு என்பன முகத்தலளவைகள். கழஞ்சு, மஞ்சாடி, காசு என்பன தங்க நிறுவைகளாம். நிலவரி தானியமாகவும் தங்கமாகவும் வாங்கப்பட்டது. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை. பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன. விவசாயிகள், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிக்குக் “கடமை” எனப் பெயரிட்டதன் மூலம் அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது. இந்த வரியை செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவாக்கப்பட்டது .சில வகை வரிகள் காசாகவே வாங்கப்பட்டன. தொழில் வரிகூட உண்டு. தட்டார்கள் தட்டார்ப் பட்டம் என்ற வரி செலுத்தினர்.
வாணியச் செட்டியார்கள் செக்கிறை, நெசவாளர்கள் தரியிறை, குயவர்கள் குசக்காணம், ஆயர்கள் இடைவரி முதலிய வரிகளைச் செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் தறி இறையும், எண்ணெய் பிழிபவர் செக்கு இறையும், தட்டார், தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், தச்சு இறையும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில், ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன.
மேலும் ஆகம நெறிப்படி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட கோவில்களில் தஞ்சைப் பெரிய கோவிலே முதற்கோவில் என்பர். சைவம் பரப்பும் வேலையை மட்டும் அக்கோவில் செய்துகொண்டிருக்கவில்லை. சோழர்காலத்தின் வட்டிக்கடையாகவும், நில உடைமையாளராகவும், பொற்களஞ்சியமாகவும் அரசின் அதிகார பீடமாகவும் விளங்கியது. சோழநாட்டின் விளை நிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது. கோவில் நிதிக் குவியலில் பண்டாரம் இருந்து விவசாயிகள் தமது தொழிற்தேவைகட்கும், பெண்களுக்கு சீதனம் தரவும் கடன் பெற்றனர். பெருவுடையார் கோவில் கணக்கில் இருந்த பல்லாயிரக் கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும் பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் கடனாகத் தரப்பட்டு 12 சதவீதம் வட்டியாக பணமாகவோ பொருளாகவோ வசூலிக்கப்பட்டது. இது சோழர்கால பொருளாதார கட்டமைப்பை எடுத்துக்காட்ட உதவுகின்றது.
அது மட்டும் இன்றி பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம். ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன், 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென 4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான். அன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பும் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்கட்கு ‘ சாவா மூவாப் பேராடுகள்’ எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டன. ‘வெட்டிக் குடிகள்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது.
முடிவுரை
ஆகவே தொகுத்து நோக்குமிடத்து சோழர் காலத்தில் பொருளாதார கட்டமைப்பு குறித்து பரிசீலனை செய்யும் பொழுது அங்கு விவசாயம் ,வாணிபம் ,வரி முதலீடுகளின் மூலம் பொருளாதார கட்டமைப்பு பிரிக்கப்பட்டு பொருளாதார வருவாய் பெறப்பட்டுள்ளது எனலாம்.
EUSL