மருந்துகளை இறக்குமதி செய்வதில் பல சிக்கல் : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ !



சர்வதேச சந்தையில் சில அத்தியாவசிய மருந்துகள் இல்லாத காரணத்தினால் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் எமக்கு தேவைப்படுவதுடன் மருந்து பொருட்களுக்கான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச சந்தையில் சில அத்தியாவசிய மருந்துகளுக்கு இல்லாத காரணத்தால் தற்போது நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தட்டுப்பாடாக உள்ள மருந்து வகைகளை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் எமக்கு தேவைப்படுகிறது.

வாறெனினும் பொதுமக்களை கருத்திற் கொண்டு மருந்து பொருட்களுக்கான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக சில மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் மருந்துகள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை கொள்வனவு செய்து அவற்றை துரிதமாக அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.

நிதிப் பற்றாக்குறை காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்வதில் பல சிக்கல் உருவாகியுள்ளன. மருந்துக் கொள்வனவுடன் தொடர்புடைய அமைப்புகளை சீர்செய்ய வேண்டியுள்ளது.

மருந்துகளை கொள்வனவு செய்ய யார் வேண்டுமானாலும் தன்னிச்சையாக முன்வந்து எமக்கு ஒத்துழைக்க முடியும். அதில் எவ்வித பிரச்சனையும் இல்லை.

தேவையான மருந்துகள் கிடைக்கும் பட்சத்தில், அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்து மருந்துகளை கொள்வனவு செய்யும் என்றார்.