கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஆப்ப மாமா குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (17) இரவு கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஐஸ் போதைப் பொருளுடன் கைதானார்.
அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேச வைத்தியசாலை வீதி மற்றும் ஷம்ஸ் தேசிய பாடசாலைக்கும் அருகில் வைத்து பெரியநீலாவணை வி.சி வீதியை சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 30 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன் சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
மேலும் இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.இஹலகேவின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.