மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியத்திற்காக
அடுத்த 5 மாதங்களுக்கு மாதாந்தம் 9,375 ரூபாய் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட விரைவு சிறிய மீன்பிடி படகுகளுக்கு இந்த மானியம் வழங்கப்பட உள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மீனவர்களுக்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் மானியத்தை எளிதாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் காலத்திற்கும் டீசல் மானியம் லீட்டருக்கு 25 ரூபா வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியால் மீனவர்கள் சந்தித்து வரும் சிரமங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கடந்த ஒக்டோபர் 1ம் திகதி முதல் டீசல், மண்ணெண்ணெய் மானியம் வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்திருந்தது.
இதன்போது, டீசல் மானியம் லீட்டருக்கு 25 ரூபாவும், மண்ணெண்ணெய் லீட்டருக்கு 25 ரூபாவும் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 15 லீட்டர் என்ற அடிப்படையில் ஒரு மாதத்தில் 25 நாட்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த மானியம் நடைமுறையில் இருந்த போது இனங்காணப்பட்ட குறைபாடுகளுக்கு அமைவாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட புதிய மானிய முறைமைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனுடன் தொடர்புடைய அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு...
04. பொருளாதார நெருக்கடியால் மீன்பிடித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைக் குறைத்து மீன்பிடித் துறையை இயல்புநிலைக்குக் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் - 2024
பொருளாதார நெருக்கடி காரணமாக மீன்பிடித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைக் குறைத்து மீன்பிடித் துறையை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் நோக்கில் 2024.10.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் 06 மாதகாலத்திற்கு எரிபொருளாக டீசலைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் படகு உரிமையாளர்களுக்கு ஒரு லீற்றருக்கு 25ஃ-ரூபாவாகவும், மற்றும் எரிபொருளாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்துகின்ற கடற்றொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 15 லீற்றர் மண்ணெண்ணெய் வீதம் மாதமொன்றுக்கு உயர்ந்தபட்சம் 25 நாட்களுக்கு மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 25ஃ-ரூபாவாகவும் 'மீன்பிடித்துறையை இயல்புநிலைக்குக் கொண்டு வரும் கொடுப்பனவாகப்' பெற்றுக் கொடுப்பதற்கு 2024.08.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, எரிபொருளாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்துகின்ற சிறிய படகுகளுக்குரிய இச்சலுகையை வழங்குவதற்கு மிகவும் வசதிப்படுத்தும் நோக்கில் மீன்பிடி மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட இயங்குநிலையிலுள்ள சிறிய மீன்பிடிப் படகு உரிமையாளர்களுக்கு மாதாந்தம் 9,375ஃ-ரூபா கொடுப்பனவு 'மீன்பிடித் துறையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான கொடுப்பனவாக' 2024.11.01 ஆம் திகதி தொடக்கம் 05 மாத காலத்திற்கு வழங்குவதற்கும், டீசல் மீன்பிடிப் படகு உரிமையாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற சலுகைகளை முற்கூட்டியவாறே வழங்குவதற்கும் மீன்பிடி, நீரியல்வள மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.