# # # # # # # # # # # # # #

வலுவிழந்தது தாழமுக்கம் !


தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்க பிரதேசம் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (13) நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்தின் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடற்றொழிலாளர்கள் அவதானம்
இன்று (13) திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.