மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தை இனந்தெரியாதவர்களால் தீக்கிரை !


மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தை நேற்று வெள்ளிக்கிழமை (27) இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் ஒரு சந்தையாக Bridge Market காணப்பட்டது.

சுமார் 12 வருடங்களாக 30 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தமது வாழ்வாதாரத்திற்காக நாளாந்தம் மரக்கறி, அரிசி, அரிசி மா, தேன், நெய், கருவாடு போன்ற மேலும் பல உள்ளூர் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டி வந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழமைபோன்று காலை 7 மணி முதல் பி.ப 2 மணி வரை வியாபார நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடுவதுடன், அதனைத் தொடர்ந்து பிற்பகல் வேளையில் குறித்த பகுதியில் மரக்கறி, பழவகை போன்ற பொருட்களை வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று நள்ளிரவு சந்தேகத்தின் பேரில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளுக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த சில மாதங்களாக குறித்த சந்தைக்கு அருகாமையில் கடமையில் ஈடுப்பட்ட பொலிஸாரின் கடமை நிறுத்தப்பட்டதன் பின்னர் அந்த பகுதியில் குற்றச் செயல்களும், போதைப்பொருள் பாவணையாளர்களின் நடமாட்டமும் அதிகரித்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை தொடக்கம் வெல்லாவெளி வரையான பகுதிகளில் இருந்து தமது வாழ்வாதாரத்தினை ஈட்டுவதற்காக நாளாந்தம் போக்குவரத்திற்காக அதிக செலவினை மேற்கொண்டு மட்டக்களப்பு நகரிலுள்ள மக்களுக்கு நஞ்சற்ற உணவு பொருட்களை சேவை மனப்பான்மையுடன் குறைந்த விலையில் விற்பனை செய்து வரும் இவர்கள் தமக்கான நீதியை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.